
லண்டன், ஜன. 17- உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (ஆர்.இ.)
துறையில் மலேசியாவின் துரித வளர்ச்சியை தெனாகா நேஷனல்
பெர்ஹாட் (டி.என்.பி.) நிறுவனம் உறுதி செய்து வருகிறது. இதன்
அடிப்படையில் இங்கிலாந்தின் ஈஸ்பீல்ட் மற்றும் பங்கர்ஸ்ஹில்ஸ்
பகுதியில் 102 மெகாவாட் சக்தி கொண்ட சோலார் எனப்படும் சூரிய
ஒளியீர்ப்பு பண்ணையை அந்நிறுவனம் தொடக்கியுள்ளது.
இந்த சோலார் பண்ணையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இவ்விரு பண்ணைகளும் ஒட்டுமொத்தமாக 102 மெகாவாட் மின்சாரத்தை
உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளதோடு இதற்கான வர்த்தக
ரீதியான செயல்பாட்டு அனுமதி அடுத்தாண்டு தொடக்கத்தில்
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இங்கிலாந்து முழுவதிலும் மற்றும் அயர்லாந்திலும்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சொத்துகளை உருவாக்கும், நிர்வகிக்கும் மற்றும்
உரிமை பெற்றிருக்கும் நிறுவனமாக டி.என்.பி. விளங்குகிறது. தரை
சோலார் மற்றும் கடல்சார் காற்று மற்றும் பேட்டரி மின்சக்தி
திட்டங்களும் இதில் அடங்கும்.
மேலும் இரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அண்மையில்
பூர்த்தியடைந்தன. வர்த்தக ரீதியான நடவடிக்கைக்கு அனுமதி கிடைக்கும்
போது இங்கிலாந்தில் டி.என்.பி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த எரிசக்தி
உற்பத்தி ஆற்றல் 908 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது