
லண்டன், ஜன.17- போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து காஸாவில் புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்துவதில் மலேசியா ஜப்பானுடன் இணைந்து செயல்படும்.
சமீபத்திய மேம்பாடுகள் குறித்து விவாதிக்க ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவை தாம் தொடர்பு கொள்ளவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
காஸாவின் புனரமைப்புக்கு இஷிபாவிடம் ஒரு பரிந்துரை உள்ளது. தற்போது அடையப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் காரணமாக அது விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் நேற்று நடைபெற்ற இன்வெஸ்ட் மலேசியா நிகழ்வில் முக்கிய உரையை நிகழ்த்திய பின்னர் மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜூலை மாதம் பாலஸ்தீன வளர்ச்சிக்கான கிழக்காசியா (சீபேட்) ஒத்துழைப்பு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான நாட்டின் முயற்சிக்கு ஜப்பானுடன் இணைத் தலைவராக இருக்கும்படி மலேசியாவை இஷிபா கேட்டுக் கொண்டார்,
உடனடியாக உதவுவதற்கு ஏதுவாக நாங்கள் நிதி வளங்களைத் தேடுவோம். ஆகவே, காஸாவுக்கு உதவுவதற்கான வழிகளைக் கண்டறிய அந்த செயல்குழு உடனடியாகக் கூட வேண்டும் என்று நான் பிரதமர் இஷிபாவை கேட்டுக் கொண்டேன் என்று அவர் கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் இஷிபா மலேசியா வந்த போது காஸாவின் மறுநிர்மாணிப்பு தொடர்பான ஜப்பானின் முயற்சி குறித்து விவாதிக்கப்பட்டது.