
மா.பவளச்செல்வம்
பகாங், ஜன 20-
தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அளவிலான பொங்கல் விழா நெகிரி செம்பிலான் பகாவ் நகரில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தைப்பொங்கல் விழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மலேசியர்கள் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இப்பொங்கல் விழாவை மலேசிய மக்கள் சக்தி கட்சி ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக ஏற்பாடு செய்து வருகிறது.
அவ்வகையில் இவ்வாண்டுக்கான பொங்கல் விழா நெகிரி செம்பிலான் பகாவ்வில் நடைபெற்றது.
நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் ஆசிரியர் எஸ்பி கானா தலைமையிலான குழுவின் இந்த பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
முதலில் பொங்கல் வைக்கப்பட்டது
அதன் பின் தோரணம் பின்னுவது, கோலம் போடுவது, உரியடித்தல் உட்பட பல போட்டிகள் நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற முதியவர்களுக்கு பரிசு பொருட்கள், அதிர்ஷ்ட குலுக்கல், கலை நிகழ்ச்சி என இந்த விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த தைப்பொங்கல் தமிழர் விழா மக்கள் சக்தி கட்சிக்கு இது ஒரு வெற்றி விழாவாக அமைந்துள்ளது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.
அந்த வகையில் இந்திய சமுதாயம் கல்வி பொருளாதாரம் உட்பட அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று அவர் வாழ்த்தினார்.