
ஈப்போ, ஜன. 21: இந்நாட்டில் நம் மூதாதையர் தோன்றிய காலம் முதல் இன்றுவரை நடந்தேறிய சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்து வரலாற்று பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது என்று நாலாசிரியர் டாக்டர் பாஸ்கரன் கூறினார்.
இந்நூல் பொருள்தேடி மலேசிய திருநாட்டிற்கு வந்த தமிழக மக்களின் வாழ்க்கை பயணத்தையும் வரலாற்றையும் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தம் தாத்தா ஒரு விவசாயியாகவும் பின் தோட்டப்புற தொழிலாளியாகவும் இந்நாட்டில் பயணித்துள்ளார். அதன் பின் என் தந்தை ஒரு வணிகராக செயல்பட்டு எங்கள் குடும்ப மேம்பாட்டிற்கு பேருதவியாக செயல்பட்டதை இப்புத்தகத்தில் நிலைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்புத்தகம் இன்றைய இளைய சமூகத்தினருக்கு நல்ல படிப்பினை வழங்கலாம். இந்நூல் அவர்களின் வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையலாம். அவர்களின் வாழ்க்கைக்கு எந்தவொரு அறிவுரை வழங்காமல், இந்நூலை படிக்கும் பொழுதே அவர்களின் உணர்வுக்கு தன்முனைப்பாக விளங்கும் பொருட்டு இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நூலில் கிடைக்கப்பெறும் நிதி தமது 50 வது வயதில் உருவாக்கப்பட்ட கல்வி நிதி வாரியத்தில் சேர்க்கப்படும். இவ்வாரியம் இந்நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் உயர்கல்வியை தொடரும் பி40 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அவர்தம் கருத்தை பதிவு செய்தார்.
பேராக் தமிழர் திருநாள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சமூக தொண்டர் டாக்டர் ஞானபாஸ்கரன் நம் முன்னோர்கள் இந்நாட்டிற்கு வருகையளித்த நாள் முதல் இன்று வரை நடந்தேறிய சம்பவங்கள் அல்லது நிகழ்வுகளை இந்நாலில் பதிவிட்டுள்ளார் என்று இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய வழக்கறிஞர் எம்.மதியழகன் கூறினார்.
இந்நூலில் அரிய கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்நூலை படிப்போருக்கு நல்ல படிப்பினையாகவும் அமையும். குறிப்பாக, இந்நூல் இந்நாட்டு இந்திய வம்சாவழியினரின் பொக்கிஷமாக அமைந்துள்ளது. நூலாசிரியர் நீண்ட கதையாக தமிழர்களின் வெற்றி பாதையை வெளிகொணர்ந்துள்ளார் என்று தம் பாராட்டை நூலாசிரியருக்கு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் நூலாசிரியர் டாக்டர் ஞானபாஸ்கரனிடமிருந்து வருகையாளர்கள் நூலை பெற்றுக்கொண்டனர். இதற்கு முன்னதாக இந்நூல் ஜோகூர் பாரு மற்றும் கோலாலம்பூரில் வெளியீடு செய்யப்பட்டு விட்டது.இந்திய மக் களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.