ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டில் தேசிய முன்னணி அரசாங்கம் தலா 5 கோடி வெள்ளியை ஒதுக்கியது.
2018இல் ஆட்சிக்கு வந்த பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கமும் நாட்டில் உள்ள 527 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 5 கோடி வெள்ளியை ஒதுக்கியது.
பக்கத்தான் ஆட்சியை கவிழ்த்து விட்டு கொள்ளைப்புற வழியாக ஆட்சிக்கு வந்த பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் 2021 பட்ஜெட்டில் 527 தமிழ்ப்பள்ளிகளுக்கு 2 கோடியே 99 லட்சத்து 80,000 வெள்ளியை மட்டுமே ஒதுக்கியது.
2022 பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 3 கோடியே 47 லட்சத்து 90,000 வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
அதாவது கடந்த இரு ஆண்டுகளில் மட்டுமே 2021,2022 பட்ஜெட்டில் ஒட்டு மொத்தமாக தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் 3 கோடியே 52 லட்சத்து 30,000 வெள்ளி குறைக்கப்பட்டிருப்பது பெருத்த வேதனையாகும்.
தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் குறைக்கப்பட்டது தொடர்பில் முன்னாள் துணை கல்வி அமைச்சரும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் பலமுறை நாடாளுமன்றத்தில் கேள்வியை எழுப்பியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளுக்குரிய மானியத்தை குறைத்த புதிய அரசாங்கம் இந்திய சமுதாயத்தையும் ஏமாற்றியிருப்பதாக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமாரும் கடுமையாக சாடியுள்ளார்.
பக்கத்தான் ஹராப்பான் எம்.பி.க்கள் உட்பட இந்திய அரசு சார்பு இயங்கங்களும் இது குறித்து பலமுறை கேள்வியை எழுப்பியபோதும் முறையான பதில்கள் இல்லை.
தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் இந்திய சமுதாயம் கடந்த இரு ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மானியங்களும் இன்னும் வந்து சேரவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.
இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விடுபட்டு போன தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியங்கள் மீண்டும் சேர்க்கப்படுமா என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கேள்வி கணைகளை முன் வைத்துள்ளார்.
அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள சமுதாய தலைவர்கள் இது குறித்து துணிந்து கேள்வி எழுப்புவார்களா அல்லது sokong என்று சொல்லிவிட்டு காணாமல் போய்விடுவார்களா?
இது அருமையான பட்ஜெட், அற்புதமான பட்ஜெட், பாலும் தேனும் ஆறாக ஓடும் பட்ஜெட் என்று கூறி மழுப்புவார்களா என்பது இன்று 7ஆம் தேதி தெரிய வரும் என்றார்.