


கோலாலம்பூர், மே 7-
வறிய நிலையில் வாழும் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் பொருட்டு கம்யூனிட்டி பில்டர்ஸ் ஃபவுண்டேஷன் எனும் அரசு சார்பற்ற நிறுவனம் விருந்துடன் கூடிய இன்னிசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
வரும் ஜூன் 11 ஆம் தேதி இரவு மணி 7.00க்கு தலைநகர், செந்தூல்.எச்ஜி.எச் மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் சோழா சோழா புகழ் சத்திய பிரகாஷ்,கிரேமி விருது பாடகி டான்விஷா ஆகிய இருவரோடு தமிழகத்திலிருந்து ஐவர் அடங்கிய இசையமைப்பாளர்களும் கலந்து கொள்வதாக கம்யூனிட்டி பில்டர்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர் டத்தின்ஸ்ரீ கனகம் பழனிவேலு தெரிவித்தார்.
இவர்களோடு உள்ளூர் கலைஞர்களான டாக்டர் ரவிசந்திரிகா, ஆஸ்ட்ரோ புகழ் புவனேஸ்வரன்,ஏ.ஆர். ரஹ்மான் 3.0 தேர்வில் வாகை சூடிய எஸ்.தேவராஜன்,ஜே.சுகுணா ஆகியோரும் பங்கேற்கவிருப்பதாக இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் கனகம் விவரித்தார்.
இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் முன்னாள் இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ பழனிவேலால் கடந்த 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறவாரியம் தையல் கலை, மண் பாண்ட பொருள் தயாரிப்பு போன்ற துறைகளில் ஈடுபட்ட இந்தியர்களின் மேம்பாட்டிற்கு உறுதுணை புரிந்துள்ளது.
சிறு இடைவெளிக்குப் பின்னர் நேர்மையும் அனுபவமும் கொண்ட குழுவினருடன் மீண்டும் களத்தில் இறங்கியுள்ள இந்த அறவாரியம் தனது சேவைகளைச் சீராகத் தொடர்வதற்கு நிதி வளத்தைப் பெறுவதற்காக விருந்துடன் கூடிய இன்னிசை நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்ததாக அவர் சொன்னார்.
இதற்காக பொது மக்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பைத் தாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட ஹாவுஸ் ஆஃப் இசை ஹெரிதாஜ் போன்ற அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய இந்த இன்னிசை நிகழ்ச்சியின் இயக்குநர் டத்தோஸ்ரீ மலர்விழி குணசீலன் நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பாடகர் சத்திய பிரகாஷ் பல புகழ்ப் பெற்ற பாடல்களைப் பாடவிருக்கும் வேளையில் உள்ளூர் கலைஞர்களும் இவருக்கு நிகராக தங்களின் திறமையை வெளிப்படுத்துவர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் டத்தின்ஸ்ரீ கனகம் 5 அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுக்கு www.ticket2u.com.my அல்லது சாந்தி 016-9800857,ஷாம் 012-6050050 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.