
மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு, மோசடி வழக்கு ஒன்றில் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம், அவருக்கு 26 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடியவர் ஆங் சான் சூகி.
கடந்த 2020ல் நடந்த பொது தேர்தலில் இவர் தலைமையிலான கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதை ஏற்க மறுத்த அந்நாட்டு ராணுவம், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டி கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆட்சியை கலைத்து அதிகாரத்தை கைப்பற்றியது. அதன்பின் ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, ஊழல் வழக்குகள், தேர்தல் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு ஆங் சான் சூகி மீது வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்குகளை விசாரித்த மியான்மர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. அதை தொடர்ந்து பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், 23 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அதிகரித்தது.