உலகெங்கும் பரவிக் கிடக்கின்ற தமிழர்களை ஒன்றிணைத்து ஒற்றுமையையும் வலுவான தமிழனத்தை கட்டியெழுப்பவும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “அயலகத் தமிழர் நாள் விழா 2024” மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் குழுவை சார்ந்த பேராசிரியர் முனைவர் பொன்.கதிரேசன் தெரிவித்தார்.
அயலகத் தமிழர் நாளாக வருகின்ற ஜனவரி திங்கள் 11 மற்றும் 12ஆம் தேதியை அங்கீகரித்து மிகவும் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் இவ்விழா சென்னை வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இம்மாநாடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் கீழ் ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உலகத் தமிழர்களே வாருங்கள்,நமக்கான உலகளாவிய அடையாளத்தை மெய்ப்பிப்போம் என அதன் ஏற்பாடு குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.
ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இம்மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் தங்கள் நிறுவனம்,அமைப்பு அல்லது தனிநபராகவோ கலந்து கொள்ளலாம்.உலக அரங்கில் தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் உலகெங்கும் வசிக்கும் தமிழினத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாகவும் அமைந்திருக்கும் இவ்விழாவில் வெளிநாடு வாழ் தமிழர்களின் படைப்புகள் வெளியீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தங்களின் நூல் வெளியீடு காணவும் தங்களின் படைப்புகள் அவ்விழாவில் அங்கிகரிக்கப்படவும் ஒவ்வொரு எழுத்தாளரும் நூலின் அட்டைப் படத்துடன் சுயகுறிப்பு,நூலின் உள்ளடக்கம் போன்றவற்றின் தகவலை அனுப்பி வைக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டது.
மிகவும் நனிச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யபட்டுள்ள இவ்விழாவில் அதன் பல்வேறு நிகழ்ச்சி நிரலில் 100 புதிய படைப்புகள் வெளியீடு காணவுள்ளது.பல்வேறு படைப்பாளர்களின் நூல் படைப்புகள் மதிப்பறிஞர் குழுவால் முறையாக தேர்வு செய்யப்படும் எனவும் குறிப்பிட்ட ஏற்பாடு குழு விரைந்து தங்களுடைய ஆற்றல் வாய்ந்த படைப்புகளை அனுப்பி வைக்குமாறு மலேசிய எழுத்தாளர்களை கேட்டுக் கொண்டனர்.
மேலும்,இவ்விழாவில் படைப்பாளர்களால் வழங்கப்படும் அதிகப்படியான நூல்கள் உலக புத்தக் கண்காட்சியிலும் வைத்து அடையாளப்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிட்ட ஏற்பாடு குழுவினர் நடப்பில் உலகளாவிய நிலையில் படைப்பாளர்கள் தங்களின் நூல்களை அனுப்பி வைக்கும் நிலையில் மலேசிய எழுத்தாளர்களும் வருகின்ற 20.12.2023க்குள் தங்களின் நூலின் அட்டைப்படம் உட்பட அதுசார்ந்த தகவல்களை pannattutamizh2022@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
அதுமட்டுமின்றி,மிகப் பிரமாண்டமான இவ்விழாவில் தேர்வு செய்யப்பட்டும் நூலுக்கு அங்கிகாரம் வழங்கப்படும் நிலையில் உலக அரங்கில் நூலாசிரியர் என்னும் மிகச் சிறந்த அறிமுகத்துடன் சிறந்த படைப்பு வெளியீடு செய்யப்பெற்று சிறப்பும் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே,மலேசியத் தமிழ் எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் அயலகத் தமிழர் நாள் விழாவில் கலந்து கொள்ளவும் தங்களின் படைப்புகள் (நூல்) அனுப்பி வைக்கவும் விரைந்து செயல்படுமாறு இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் குழு கேட்டுக் கொண்டது.