
பெட்டாலிங் ஜெயா,ஜன.13-
உலக முழுவதிலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகியுள்ள அயலான் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தினர் நேற்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிஜே ஸ்டேட் திரையரங்களில் அயலான் திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சிறப்பு காட்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூடியிருந்தனர்.
அதிநவீன தொழில்நுட்ப ரீதியில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை மக்கள் குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் காணலாம்.
டேட்டோ என்ற வேற்றுகிரகவாசியை முன்னிறுத்தி இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நகச்சுவை, சிறந்த காட்சி அமைப்பு, ஏ.ஆர்.ரகுமானின் பிரமாண்டமான இசை அனைத்தும் கலந்து சிறந்த திரைப்படமாக அயலான் உள்ளது.
இந்த திரைப்படத்தை காண செலாயாங்கிலுள்ள அன்பு இல்ல குழந்தைகளை ரசிகர் மன்றத்தினர் திரையரங்குகிற்கு அழைத்து வந்திருந்ததுடன் அவர்களுக்கு பரிசு பொட்டலங்களையும் வழங்கினர்.
சாதாரணமாக ரசிகர் மன்றம் என்றாலே சம்பந்தப்பட்ட நடிகரின் திரைப்படங்களின் முதல் காட்சிகளை திரையிடுவதை மட்டும் செய்யாமல் மாணவர்களின் கல்விக்கும் சமூக நல நடவடிக்கைகளுக்கும் அதிக ஆர்வம் செலுத்த வேண்டுமென மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஷாகினா முஸ்தப்பா தெரிவித்தார்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் ஆலோசனையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ரசிகர் மன்ற ஏற்பாட்டில் மாணவர்களின் கல்விக்கு உதவியுள்ளதுடன் சமூகநல நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயனும் எங்களுக்கு ஆதரவு வழங்கி வருவதாக அவர் சொன்னார்.