“தொடர் பொய்யர்!” — ரஃபிஸி மீது ரமணன் கடும் தாக்கு; பசுமை அறவாரிய விவகாரத்திலும் கேள்வி

கோலாலம்பூர், அக். 22 –
ரஃபிஸி ரம்லி மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்பு, நிக் நஸ்மி தொடர்பான சர்ச்சை உட்பட மலேசிய பசுமை அறவாரியத்தின் நியமனம், நிதி நிர்வாகம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று மனித வள அமைச்சரும் பிகேஆர் தேசிய உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

தம்மீது சுமத்தப்பட்டுள்ள 9.5 மில்லியன் ரிங்கிட் நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே என்று கேள்வி எழுப்பிய ரமணன், ஆதாரங்கள் இருப்பதாகத் தொடர்ந்து கூறிவரும் ரஃபிஸி, அவற்றை நிரூபிக்கும் ஆவணங்களை ஏன் வெளியிடவில்லை என்றும் வினவினார்.

கோலாலம்பூர் பார்க் ராயல் கலெக்‌ஷன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரமணன், ரஃபிஸியை “தொடர் பொய்யர்” என்று கடுமையாக விமர்சித்ததுடன், அவரது அரசியல் அணுகுமுறையையும் சாடினார்.

“இந்த விவகாரம் குறித்து நான் பேசுவது இதுவே கடைசித் தடவை. ரஃபிஸி ஒரு தொடர் பொய்யர்! எத்தனை முறை அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு அவற்றை நீக்கியிருக்கிறார்? எத்தனை முறை பேசிவிட்டு பின்னர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்?” என்று அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

தம்மீது முன்வைக்கப்பட்ட 9.5 மில்லியன் ரிங்கிட் நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்ட அவர், ஆறு அல்லது ஏழு மாதங்களாக ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவற்றை நிரூபிக்கும் ஓர் ஆவணம்கூட வெளியிடப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

“ஆதாரம் இருக்கிறது, ஆதாரம் இருக்கிறது என்று தொடர்ந்து கூறுகிறார்கள். ஆனால், ஒரு காகித ஆதாரத்தையாவது காட்டியிருக்கிறார்களா? ஆதாரம் எங்கே?” என்று ரமணன் சவால் விடுத்தார்.

தம்மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அவற்றை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அரசியல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதில் தொடர்ந்து நேரத்தைச் செலவிட விரும்பவில்லை என்றும் கூறினார்.

பசுமை அறவாரிய விவகாரம்: நியமித்தது யார், நிதி நிர்வாகம் எப்படி?

இதற்கிடையில், நிக் நஸ்மியுடன் தொடர்புபடுத்தப்படும் மலேசிய பசுமை அறவாரியம் (Yayasan Hijau Malaysia) அமைப்பின் நிர்வாகம், அங்கு தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக (சி.ஒ.ஒ) நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தொடர்பான விவகாரத்தையும் ரமணன் எழுப்பினார்.

அந்த நியமனம் அப்போது இயற்கை வளம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராக இருந்த நிக் நஸ்மியின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய அவர், நிறுவனங்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி, அதன் நிர்வாகம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

“ரஃபிஸி ரம்லியிடம் நான் கேட்க விரும்புவது இதுதான். இது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய செயலா? இது நிர்வாகத் தவறா? இது கடுமையான அலட்சியமா? இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும்,” என்று ரமணன் வலியுறுத்தினார்.

நிக் நஸ்மி விவகாரம்: கவனத்தைத் திசைதிருப்பும் அரசியலா?

நிக் நஸ்மி தொடர்பாக எழுந்துள்ளதாகக் கூறப்படும் தனிப்பட்ட சர்ச்சையையும் சுட்டிக்காட்டிய ரமணன், அந்த விவகாரத்திலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், இந்த விவகாரத்தின் பின்னணியில் ஃபர்ஹாஷ், பிரதமர், ஸெத்ரிக்ஸ் உள்ளிட்ட தரப்புகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“உண்மையைச் சொல்லுங்கள். எதையும் மறைக்க வேண்டாம். உண்மையை நேரடியாக வெளிப்படுத்துங்கள்!” என்று அவர் வலியுறுத்தினார்.

“எனது பொறுப்பு 17.34 மில்லியன் தொழிலாளர்கள்!”

அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், நாட்டிலுள்ள 17.34 மில்லியன் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதே தமது முதன்மையான பொறுப்பு என்று ரமணன் வலியுறுத்தினார்.

வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தல், மனிதவள மேம்பாடு, சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேவையற்ற அரசியல் மோதல்களில் நேரத்தைச் செலவிட விரும்பவில்லை என்றார்.

“மலேசியாவின் 17.34 மில்லியன் தொழிலாளர்களுக்காக நான் பொறுப்பேற்றுள்ளேன். அவர்களின் வேலைவாய்ப்புகள், மனிதவள மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பைப் பாதுகாக்க வேண்டும். இத்தகைய அரசியல் விளையாட்டுகளுக்கு எனக்கு நேரமில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

ரஃபிஸி மீதான கடுமையான விமர்சனம், 9.5 மில்லியன் ரிங்கிட் நிதி குறித்த ஆதாரக் கேள்விகள், பசுமை அறவாரிய அமைப்பின் நிர்வாகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எனப் பல்வேறு விவகாரங்களை ஒரே செய்தியாளர் சந்திப்பில் ரமணன் எழுப்பியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles