தமிழ்ப்பள்ளிகளில் இரு மொழி பாடத்திட்டம் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஈப்போ, ஜுன்.11-
இரு மொழி பாடத்திட்டத்தை கல்வி அமைச்சு நிபந்தனையுடன் அறிமுகம் செய்துள்ளது ஏற்புடையதல்ல.

குறிப்பாக, தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளிகளுக்கு சில நிபந்தனைகளை கல்வி அமைச்சு வலியுறுத்தி வருவது ஆரோக்கியமான விவகாரமல்ல என்று தம் கருத்தை பதிவு செய்தார் ஈப்போ கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரியத்தலைவர் கிருஷ்ணசாமி முத்துசாமி கூறினார்.

தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு மட்டுமே ஆங்கில மொழியில் அறிவியல் மற்றும் கணிதம் போதிக்க முடியும் என்று கல்வி அமைச்சு நிபந்தனையை வெளியிட்டுள்ளது.

இந்த நிபந்தனையால் சம்பந்தப்பட்ட பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் கடுமையான நிலைப்பாடு அல்லது அதிருப்தி ஏற்படலாம் என்று அவர் மனவேதனையுடன் கூறினார்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் இரண்டு மூன்று வகுப்புகள் இருக்குமானால், குறிப்பாக முதலாம் ஆண்டிலே இந்த மாணவர்களை பிரிப்பது போன்ற நிலைப்பாட்டை ஆசிரியர்கள் எதிர்நோக்க வேண்டி வருகிறது.

இதற்கு காரணம் கல்வியமைச்சு ஒரு வகுப்பிற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

மற்ற வகுப்பு மாணவர்கள் தாய்மொழியில் கணிதமும் , அறிவியலும் படிக்க வேண்டும் என்ற நிபந்தனையை கல்வியமைச்சு உருவாக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைப்பாடு எந்த வகையிலும் நியாயம் கிடையாது. ஒரு பள்ளிக்கு இருமொழி பாடத்திட்ட அனுமதி முழுமையாக அப்பள்ளியிலுள்ள அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்குவதுதான் சிறந்த வழியாகும்.

இல்லையேல், பெற்றோர்களின் ஆதங்கம் மற்றும் வசைப்பாட்டிற்கு பள்ளி நிர்வாகம் எதிர்நோக்க வேண்டி வரும் என்று அவர் கருத்துரைத்தார்.

அண்மையில் இவ்விவகாரம் குறித்து கல்வியமைச்சு மறுபரிசீலனை செய்யுமாறு ஜ செ க வின் மூத்த தலைவர் லிம் குவான் இங் கருத்துரைத்தார்.

பினாங்கு மாநில சீனப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத்தினரை சந்தித்த பின் தம் ஆதங்கத்தை அவர் பதிவு செய்தார்.

ஆனால், இவ்விவகாரம் குறித்து இந்நாட்டில் இதுவரை எந்தவொரு இந்திய அரசியல் தலைவர்கள் கருத்துரைக்காமல் இருப்பது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. நமது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விவகாரம் குறித்து கல்வியமைச்சரிடம் கலந்தாலேசித்து தீர்க்கமான முடிவு காண்பார்கள் என்று பெரிதும் எதிர் பார்ப்பதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles