
ஷா ஆலம், செப். 16- வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி
கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பந்திங்
தொகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறுவோர் ஷோம் ஷோப்பிங்
பற்றுச் சீட்டுகளுக்கு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி
விண்ணப்பிக்கலாம்.
பெருநாளைக் கொண்டாடுவதில் குறைந்த வருமானம் பெறும் பி40
தரப்பினர் எதிர்நோக்கும் பொருளாதாரச் சிக்கலைக் குறைக்கும் நோக்கில்
அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள
விண்ணப்பதாரர்களுக்கு தலா 200 வெள்ளிக்கான இலவச பற்றுச் சீட்டு
வழங்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு
கூறினார்.
இந்த இலவச பற்றுச் சீட்டிற்கு விண்ணப்பம் செய்வோர் தீபாவளியைக்
கொண்டாடுபவர்களாகவும் பந்திங் தொகுதி வாக்காளராகவும் 18 முதல் 59
வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று மனித வளம்
மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான
அவர் கேட்டுக் கொண்டார்.

