
ஷா ஆலம், டிச 3- இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா, புத்ரா ஹைட்ஸ் மற்றும் ஆலம் மேகாவில் அரசாங்க சுகாதார கிளினிக் அமைக்கப்பட வேண்டும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சுகாதார அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மருத்துவச் சேவையைப் பெறுவதில் இந்த மூன்று பகுதிகளையும் சேர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இங்கு சுகாதார கிளினிக் அமைக்கப்படுவது அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.
அரசாங்க சுகாதார கிளினிக்குகள் இந்த மூன்று பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால் இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் வயதான பெற்றோருக்கு மருத்துவச் சிகிச்சை பெறுவது மிகவும் சுமையானதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ மூடா, புத்ரா ஹைட்ஸ் மற்றும் ஆலம் மேகாவில் பொது போக்குவரத்து போதுமான அளவு இல்லாதது நிலையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
சொந்த வாகனத்தை அல்லது அதிக செலவு பிடிக்கக் கூடிய இதர போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டும்.
இது அவர்களுக்கு சுமையை அளிப்பதோடு ஆபத்து, அவசர வேளைகளில் உரிய சிகிச்சையை விரைந்து பெற முடியாத சூழலையும் ஏற்படுத்தி விடுகிறது என்றார் அவர்.
நாட்டு மக்கள் சிறப்பான மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதில் இத்தகைய இடர்பாடுகள் ஒருபோதும் தடையாக இருந்து விடக் கூடாது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

