திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக்கூடாது. சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும். நியாயமான, ஒளிவுமறைவற்ற எவ்வித பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும்’ என முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன்.

இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்றைய தினம் , 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது.

இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்துக்கப்பட்டு வருகிறது.

துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன்.

நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles