‘வெற்றி மடானி’ திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு! அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர், பிப் 12-

இந்தியச் சமூகத்தின், குறிப்பாக பி40 பிரிவினரின் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக, கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய ‘வெற்றி மடானி’ (Vetri MADANI) திட்டத்தை மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாண்டின் ‘வெற்றி மதானி’ திட்டம், டேலண்ட் கார்ப்பரேஷன் மலேசியா (TalentCorp) மற்றும் மனிதவள மேம்பாட்டுக் கழகம் (HRDCorp) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

“புதிய ஒதுக்கீடு குறித்து இன்னும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது டேலண்ட் கார்ப் மற்றும் அமைச்சின் கீழ் மலேசிய இந்தியத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை ‘மிசி 2.0’ செயல்படுத்துவதற்கான நிதி 4 மில்லியன் வெள்ளியாக உள்ளது.

“இது நிச்சயமாக இரட்டிப்பாக்கப்படும் என்று நான் உறுதி கூறுகிறேன். ஆனால், அதன் துல்லியமான அளவு தேவைகளுக்கேற்ப ஆய்வு செய்யப்படும். நாங்கள் நிதியை வீணாக்க விரும்பவில்லை; ஒவ்வொரு சென்னும் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற ‘மிசி 2.0’ பட்டமளிப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

இறுதி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, பொதுமக்களின் வரவேற்பை அளவிடப் பதிவுகள் திறக்கப்படும் என்றும், தற்போதைய தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

மிசி 2.0 திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதில் பங்கேற்ற 400 பேரில் 300 பேர், அவர்களின் துறைக்கு ஏற்ப மாதத்திற்கு 3,000 வெள்ளி முதல் 7,500 வெள்ளி வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

“வெற்றி மடானி திட்டம் பட்டதாரிகளுக்கு, குறிப்பாகப் பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் அதிக ஊதியச் சலுகைகளைப் பெற உதவும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

குறைந்தபட்ச ஊதிய அமலாக்கத்தின் மீளாய்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், தொழிலாளர்களுக்குச் சிறந்த ஊதியத்தை வழங்குவதற்காக இத்தகைய ஆய்வுகள் எப்போதும் நடத்தப்படுவதாகவும், தற்போது குறைந்தபட்ச ஊதியம் 1,300 வெள்ளியிலிருந்து 1,700ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles