சுங்கை பூலோவில் 308 மாணவர்களுக்கு வெ.113,500 கல்வி உதவித்தொகை

கோலாலம்பூர், செப் 5 –
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவன மாணவர்கள் 308 பேருக்கு, மொத்தம் வெ.113,500 மதிப்பிலான தொடக்கக் கல்வி உதவித்தொகை இன்று வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பண்டார் பாரு சுங்கை பூலோ, டேவான் மெராந்தி யு20 அரங்கில் நடைபெற்ற ‘PTPK Care’ சமூக நல நிகழ்வின் போது இந்த நிதியுதவி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. அடிப்படைக் கல்வி, மெட்ரிகுலேஷன், எஸ்டிபிஎம், டிப்ளோமா, சான்றிதழ் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி(திவெட்), இளங்கலைப் பட்டம் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி நிலைகளில் பயிலும் மாணவர்கள் இந்த உதவியைப் பெற்றுள்ளனர்.

தொழில்முறைச் சந்தையின் நவீனத் தேவைகளுக்கு ஏற்ப, உயர் திறன் மற்றும் போட்டித்தன்மை கொண்ட மனித ஆற்றலை உருவாக்குவதில் மனிதவள அமைச்சும் (கெசுமா), திறன்கள் மேம்பாட்டு நிதியக் கழகமும் (PTPK) கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை பறைசாற்றுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் உரையை வாசித்து உரையாற்றிய அவருடைய அரசியல் செயலாளர் ஐசுடின், டேலண்ட்கார்ப் அமைப்பின் ‘மைமாஹிர்’ திட்டத்தின் வழி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் திறன்களை மேம்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் 22,000 வாய்ப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அத்துடன், ‘MyFutureJobs’ தளம் தனது ஏஐ வேலைப் பொருத்தத் தொழில்நுட்பத்தின் மூலம் இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை அடையாளம் காண உதவுவதாகவும், அரசு முகமைகள் வழங்கும் இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்கள் ‘பிடிபிகே’ அமைப்பின் கல்வி நிதி உதவிகளையும், குறிப்பாக திவெட் திறன் பயிற்சிப் பாதைகளையும் எளிதில் அறிந்து கொள்வதைக் இலக்காகக் கொண்டு இந்த ‘PTPK Care’ நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய பொது நிர்வாக நிறுவனத்தின் (இந்தான்) 88-வது தொடர் உயர் தலைமைத்துவ மற்றும் மேலாண்மைத் திட்டப் (ALMP) பங்கேற்பாளர்களும் இதில் தீவிரமாகப் பங்காற்றினர்.

அரசு முகமைகளின் வியூகக் கூட்டாண்மையில் பிடிபிகே தகவல் மையம், உரிமை கோரப்படாத பணத்திற்கான கவுண்டர், ரஹ்மா மலிவு விற்பனை, இலவச சுகாதாரப் பரிசோதனை, ரத்த தான முகாம், தீயணைப்புத் துறையின் செயல்முறை விளக்கங்கள் மற்றும் விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு அம்சங்கள் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன.

இத்தகைய நேரடி அணுகுமுறை, அரசாங்கத்தின் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் கெசுமா மற்றும் பிடிபிகே-வின் நோக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles