பட்ஜெட் 2027: ‘மாஸ்கோ’அடிப்படையில் ஆரம்பச் சம்பள வழிகாட்டுதல்கள் – டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர், அக். 16–
நாட்டில் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி, திறன் நிலைக்கு ஏற்ப நியாயமான ஊதியம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில், மலேசியத் தொழில் வகைப்பாட்டுத் தரநிலையான ‘மாஸ்கோ’ (MASCO) அடிப்படையில் ஆரம்ப அடிப்படைச் சம்பள வழிகாட்டுதல்களை மனிதவள அமைச்சு (கெசுமா) தயாரித்து வருகிறது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், 2027ஆம் ஆண்டுக்கான மடானி வரவு செலவுத் திட்டத்தில் பட்டதாரிகளுக்கும் பகுதியளவு திறன் பெற்ற தொழிலாளர்களுக்கும் மாதம் 2,500 ரிங்கிட் ஆரம்ப அடிப்படைச் சம்பளம் என்ற கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மலேசியத் திறன் சான்றிதழ் (எஸ்.கே.எம்) நிலை 3 முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித் தகுதிகளைக் கொண்ட ‘மாஸ்கோ’ 1 முதல் ‘மாஸ்கோ’ 3 வரையிலான வேலைப் பிரிவுகளுக்கான ஆரம்பச் சம்பள அளவுகோல்கள் முதற்கட்டமாக இந்த வழிகாட்டுதல்களின் மூலம் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

பகுதியளவு திறன் பெற்ற தொழிலாளர்களைப் பொறுத்தவரை, எஸ்.கே.எம் நிலை 1, 2 சான்றிதழ்களைப் பெற்றவர்களையும் உள்ளடக்கும் வகையில், திறன் அடிப்படையிலான ஆரம்ப அடிப்படைச் சம்பள வழிகாட்டுதல்களுடன் இந்த அணுகுமுறை ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் ‘மாஸ்கோ’ 1 முதல் ‘மாஸ்கோ’ 8 வரையிலான வேலைப் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் இந்தக் கட்டமைப்பை விரிவுபடுத்த முடியும் என்றார்.

ஆரம்ப அடிப்படைச் சம்பள விகிதங்கள் மலேசியப் புள்ளிவிவரத் துறையின் (டி.ஓ.எஸ்.எம்) அண்மைய தரவுகளின் அடிப்படையில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் என்றும், அவை ‘இ-மாஸ்கோ’ (e-MASCO) இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன், 2027 ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் புதிய குறைந்தபட்ச ஊதிய ஆணையுடன் இணைந்து வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள பெர்கேசோ கட்டடத்தில் நடைபெற்ற ‘மாஸ்கோ’ அடிப்படையிலான ஆரம்ப அடிப்படைச் சம்பள வழிகாட்டுதல்கள் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, பட்டதாரிகளுக்கான ஆரம்பச் சம்பளம் வழிகாட்டுதல்களின் மூலம் செயல்படுத்தப்படும். இதற்கிடையில், கல்வித் தகுதி அம்சத்தையும் இணைக்கும் வகையில் 2011ஆம் ஆண்டின் தேசிய ஊதிய ஆலோசனைக் குழுச் சட்டத்தில் (சட்டம் 732) திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக ரமணன் கூறினார்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கான குறைந்தபட்ச சம்பளத்தைச் சட்டப்பூர்வமாகக் கட்டாயமாக்குவதற்கான வழிவகை ஏற்படும் என்றும் அவர் விளக்கினார்.

இதனிடையே, 1955ஆம் ஆண்டின் வேலைவாய்ப்புச் சட்டத்தை மேலும் திறம்பட அமல்படுத்துவதற்காக, மின்னணு முறையில் சம்பளப் பட்டுவாடாவைக் கண்காணிக்கும் ‘இ-வேஜஸ்’ (e-wages) எனும் புதிய பொறிமுறையை அமைச்சு விரிவாகத் திட்டமிட்டு வருவதாகவும் அவர் அறிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களையும் உள்ளடக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள இந்த மின்னணு முறை, சம்பள நிலுவை, ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறைவாகச் சம்பளம் வழங்குதல் போன்ற முக்கியப் பிரச்சினைகளைக் கையாள உதவும் என்றார்.

2027ஆம் ஆண்டுக்கான மடானி வரவு செலவுத் திட்டத்தின் ஒட்டுமொத்த அறிவிப்புகள் குறித்துப் பேசிய ரமணன், திறன் பயிற்சி, தொழிலாளர் நலன், சமூக மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் மூலோபாய ஒதுக்கீடுகளை வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அமைச்சுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப – தொழிற்கல்வி, பயிற்சித் துறை (திவெட்) திட்டங்களுக்கு 8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு, இ-ஹெய்லிங், பி-ஹெய்லிங் தொழிலாளர்களின் நலனுக்காக அரசாங்கத்திற்கும் கிரெப் நிறுவனத்திற்கும் இடையிலான 160 மில்லியன் ரிங்கிட் கூட்டு நிதித் திட்டம், அத்துடன் 2027ஆம் ஆண்டில் டேலண்ட் கார்ப் நிறுவனத்தின் ‘பாகாட் மாடானி’ திட்டத்தின் மூலம் 30,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்கு ஆகியவை முக்கிய முன்னெடுப்புகளில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டைப் பொறுத்தவரை, இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவுக்கான (மித்ரா) ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை தானியக்கமாக்கல், விமானப் போக்குவரத்துத் தொழில்நுட்பம் போன்ற உயர் திறன் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சிறு தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் தெக்கூன், அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) மூலம் 150 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியும், மோசமான நிலையில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைப் பராமரிப்பதற்காக 50 மில்லியன் ரிங்கிட் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, ஜொகூர் மாநிலம் குளுவாங்கில் அமைந்துள்ள பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முழுமையான மாற்றுப் பள்ளிக் கட்டடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தெளிவான, நியாயமான சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் சம்பளச் சுருக்கப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே மனிதவள அமைச்சின் முக்கிய நோக்கம் என்று ரமணன் வலியுறுத்தினார்.

அத்துடன், 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் சராசரி மாதச் சம்பளத்தின் நடுநிலையை 3,500 ரிங்கிட்டாக உயர்த்துவதும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) தொழிலாளர் இழப்பீட்டின் (சி.இ) பங்களிப்பை 40 விழுக்காடாக அதிகரிப்பதும் ஆகிய 13ஆவது மலேசியத் திட்டத்தின் (ஆர்.எம்.கே-13) இலக்குகளை அடைவதற்கும் இந்த முயற்சிகள் ஆதரவளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles