8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9.01 லட்சம் நிதி ஒதுக்கீடு! டத்தோஸ்ரீ ரமணன் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, அக். 15-
மலேசியா முழுவதும் எஸ்பிஎம் , எஸ்டிபிஎம் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் 8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில், மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா) 2026ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழிப் பாடத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 901,680 ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.

மனிதவள அமைச்சின் (கெசுமா) கீழ் செயல்படும் மித்ரா, கல்வி அமைச்சுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் 7,897 எஸ்பிஎம் மாணவர்களும் 793 எஸ்டிபிஎம் மாணவர்களும் பயனடைவதாக மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துதல், தமிழ் மொழிப் பாடத்தில் சிறந்த அடைவு நிலையை எட்டுவதற்கு உதவுதல், தேர்வுகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான கல்விசார் ஆதரவை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இதன் மூலம் மலேசிய இந்திய மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்துவதுடன், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவையான ஆதரவையும் வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மடானி அரசாங்கம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்தார்.

மாணவர்கள் தங்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், மித்ரா வாயிலாகக் கல்வி உதவிகளை வழங்குவதுடன், மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்மொழி என்பது தேர்வுக்கான ஒரு பாடம் மட்டுமல்ல; அது மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தின் முக்கிய அங்கம் என்றும், எதிர்காலத் தலைமுறையினருக்காக அதனைப் பாதுகாத்து வளர்ப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சிலாங்கூரைச் சேர்ந்த சுமார் 300 எஸ்பிஎம் மாணவர்கள் பங்கேற்ற தமிழ்மொழிப் பாடத் திறன் மேம்பாட்டுப் பட்டறை இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மெனாரா பிஏசியின் ஹோரிசோன் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை டத்தோஸ்ரீ ரமணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ, மனிதவள அமைச்சின் செயல்பாட்டுப் பிரிவுக்கான துணைச் செயலாளர் சுதேக்னோ பின் அஹ்மட் பெலோன், மித்ரா தலைமை இயக்குநர் கே.ரவீந்திரன் நாயர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும், கல்வி அமைச்சின் தினசரிப் பள்ளி நிர்வாகப் பிரிவு இயக்குநர் முகமது ஹனாஃபி பின் சமாட், சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் கற்றல் பிரிவு துணை இயக்குநர் ஹனிசா பிந்தி முகமது அலி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் 50 கல்வியாளர்களும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் தேர்வுத் தயார்நிலை, தன்னம்பிக்கை மற்றும் தமிழ்மொழிப் பாடத் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு இப்பட்டறை முக்கியத்துவம் அளித்தது.

மித்ரா, ‘கல்வி மடானி’ முன்னெடுப்பின் கீழ் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதற்காக கல்வி அமைச்சு, மாநிலக் கல்வித் துறைகள் (ஜேபிஎன்) மற்றும் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிகமான இந்திய மாணவர்கள் பயனடைவதுடன், அவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles