
கோலாலம்பூர், அக். 17–
மலேசியாவில் தமிழர்களின் மொழி உணர்வையும், பண்பாட்டு அடையாளத்தையும் மதிக்கும் வகையில், ‘தீவாளி’ என்பதற்குப் பதிலாக ‘தீபாவளி’ என்ற சொல்லையே நிலைநிறுத்த வேண்டும் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, பிரிக்ஃபீல்ட்ஸ் வணிக மையத்தின் தலைவாசலில் இடம்பெற்றுள்ள பெயர்ப்பலகையில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லுக்கு அச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மலேசிய இந்தியர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, நாட்டின் அதிகாரப்பூர்வப் பதிவுகளிலும் முக்கியப் பண்டிகையாகக் குறிப்பிடப்பட்டு, பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், தீபாவளி வாழ்த்து அட்டைகள், அச்சு ஊடகங்களில் வெளியாகும் வாழ்த்துகள் உள்ளிட்டவற்றிலும் ‘தீபாவளி’ என்ற சொல்லே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தவறான சொல்லாடல் குறித்து ஏற்கெனவே சுட்டிக்காட்டிய பின்னரும், அதனைத் திருத்தாமல் தொடர்ந்து பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது எனச் சங்கம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் வாழும் பெரும்பான்மையான தமிழர்கள் இப்பண்டிகையை ‘தீபாவளி’ என்றே அழைத்து வரும் நிலையில், அதனை மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம் எனக் குறிப்பிட்டுள்ள சங்கம், தமிழர்கள் அதிகம் வாழும் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் அவர்களின் மொழி உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இத்தகைய பெயர்ப்பலகை அமைந்திருப்பது தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளது. இத்தகைய செயல்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியைக் குறைப்பதோடு, அப்பண்டிகையின் பெயரையும் அதன் முக்கியத்துவத்தையும் அவமதிக்கும் வகையில் அமைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
பல்லின மக்கள் ஒற்றுமையுடன் வாழும் மலேசியாவில், பிற இன மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் பாதிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம் எனச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, பிரிக்ஃபீல்ட்ஸ் தலைவாசலில் உள்ள பெயர்ப்பலகையில் இடம்பெற்றுள்ள சொல்லாடலைத் திருத்தி, ‘தீபாவளி’ என்ற சரியான சொல்லை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கையில் வலியுறுத்தியுள்ளது.

