
கோலாலம்பூர் அக் 17-
தீபாவளி வார்த்தை விவகாரத்தில் திவாளி என்ற சொல்லை பயன்படுத்துவது தொடர்பாக
ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ மற்றும் பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் ஆகியோருக்குக் தமிழர் தேசியப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் தீபாவளியைத் ‘திவாளி’ எனக் குறிப்பிடுவதன் மூலம் இந்தியச் சமுதாயத்தை ஒருங்கிணைக்க முடியும் என்ற கருத்து ஏற்புடையதல்ல.
இக்கருத்தை முன்வைத்த ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ மற்றும் பாசிர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் ஆகியோருக்கு மலேசியத் தமிழர் தேசியப் பேரவை தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மலேசிய இந்தியச் சமுதாயத்திற் கென தமிழ்ப்பள்ளிகள், தமிழ் வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் ஆகியவை தமிழ் மொழியையும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகின்றன.
இந்நிலையில், தமிழர்களும் இந்திய சமுதாயமும் பொதுவாக பயன்படுத்தும் ‘தீபாவளி’ என்ற சொல்லைப் புறக்கணித்து, ‘திவாளி’ என்ற சொல்லை முன்னிறுத்துவது அவர்களின் பொது மொழி அடையாளத்தை மதிக்காத அணுகுமுறையாகும்.
‘தீபாவளி’, ‘திவாளி’ ஆகியவை ஒரே சொல்லின் உச்சரிப்பு வேறுபாடுகள் மட்டுமே என்ற வாதத்தை கடந்து செல்ல முடியாது.
ஒரு சொல்லின் பயன்பாடு என்பது வெறும் உச்சரிப்புடன் முடிவதில்லை; அது மொழி, சமூக அடையாளம் ஆகியவற்றுடனும் தொடர்புடையது.
மலேசியத் தேசிய மொழி மற்றும் இலக்கியக் கழகத்தின் (Dewan Bahasa dan Pustaka) வெளியீடுகளிலும் ‘தீபாவளி’ என்ற சொல்லே பயன்படுத்தப்படுவதைப் பேரவை சுட்டிக்காட்டுகிறது.
எனவே, அரசியல்வாதிகள் ஒரு சொல்லைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் மொழியியல் தன்மை பின்னணி, ஆராய்ந்து தெளிவுபெற வேண்டும்.
2018ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கான பொங்கல் திருநாளுக்கான விடுமுறையைச் சித்திரை முதல் நாளுக்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பு வெளியான போது, தமிழ்ச் சமூகத்தின் எதிர்ப்பைத் தொடர்ந்து பொங்கலுக்கான சிறப்பு விடுமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது.
அதேபோன்று, சில இடங்களில் தமிழுக்குப் பதிலாக இந்தி எழுத்துகள் இடம்பெற்றதற்கும் எதிர்ப்புகள் எழுந்தன.
சசெக மக்கள் நிகராளிகள் யாரின் ஆலோசனைப்படி இத்தகைய முடிவை எடுக்கின்றனர் என்றுத் தெரியவில்லை.
இத்தகைய நிகழ்வுகள் தமிழ்மொழி மற்றும் தமிழர் அடையாளம் தொடர்பான விடயங்களில் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
மேலும், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியச் சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் இத்தகைய சிக்கல்களில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் பேரவை எழுப்புகிறது.
தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் தலைவர்கள், அவர்களின் மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகள் பாதிக்கப்படும்போது உரிமையை விட்டுக்கொடுக்காமல் குரல் கொடுக்க வேண்டும் அதைவிடுத்து செய்த தவற்றை தற்காத்து அறிக்கையும் காணொளியும் வெளியிடக்கூடாது.
தமிழர்களின் மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றைப் பாதுகாப்பது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிரான செயலல்ல.
மலேசியாவின் பன்முகச் சமூகத்தில் ஒவ்வொரு இனத்தின் அடையாளத்தையும் சமமாக மதிப்பது அரசின் அடிப்படைக் கடமையாகும்.
மேலும் தமிழினத்தவர் இத்திருநாளுக்கு ஏற்ற தமிழ்ச்சொல்லான விளக்கணி விழா என்ற சொல்லையும் பயன்படுத்த முனைய வேண்டும் என்றும் மலேசியத் தமிழர் தேசியப் பேரவையின் தலைவர் தமிழ்த்திறன் செல்வநாதன் கேட்டுக் கொண்டார்.

