
சுங்கை பூலோ, அக். 17 –
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் தமக்குக் கிடைத்து வரும் தொடர்ச்சியான ஆதரவும், மக்களின் நேர்மறையான கருத்துகளின் அடிப்படையிலும், அங்கு தாம் மிகவும் உறுதியான, சாதகமான சூழலில் இருப்பதாக மனிதவள அமைச்சரும் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் வழங்கிய நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் தொகுதி மக்களின் நீண்டகாலச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுமே தமது முதன்மை இலக்கு என்று அவர் வலியுறுத்தினார்.
இன்று இங்குள்ள கோத்தா டாமன்சாராவில் நடைபெற்ற ‘மடானி கித்தா’ மக்கள் தொடர்புத் திட்டம் – பொதுக் கலந்தாய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கேள்விகளோ பங்கேற்பாளர்களோ எவ்வித முன்முடிவுகளும் இன்றி, முற்றிலும் வெளிப்படையான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கலந்தாய்வு, மக்களின் உண்மையான மனநிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

*110 கோடி ரிங்கிட் வெள்ளத்தடுப்புத் திட்டம் முதல் மக்கள் குறைகளுக்கான தீர்வு வரை:*
“தொகுதி மக்களுக்காக என்னால் முடிந்தவரை சிறந்த சேவையை ஆற்றியிருக்கிறேன், இப்போதும் வழங்கி வருகிறேன்; அதை இன்னும் சிறப்பாகத் தொடர்வதற்கே முனைப்புடன் செயல்படுவேன். இறுதியில் முடிவெடுக்கப்போவது மக்களே என்றபோதிலும், இன்றைக்கான மக்களின் வரவேற்பும் கள நிலவரமும் எனக்கு மிகுந்த மனநிறைவையும் நம்பிக்கையையும் தருகின்றன,” என்று அவர் உறுதியுடன் கூறினார்.
பொதுவாக மக்கள் சந்திப்பு கூட்டங்கள் என்றால் அங்கு கூச்சலும் குழப்பமும் நிலவுவது வழக்கமாக இருக்கும் சூழலில், கிராமத் தலைவர்கள், குடியிருப்புச் சங்கப் பிரதிநிதிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற இன்றைய கூட்டம், எந்தவித சலசலப்பும் இன்றி சுமுகமாகவும் பயனுள்ள முறையிலும் நடந்தேறியதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், வடிகால் – சாக்கடைப் பிரச்சனைகளும், பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் சில உள்ளூர் சார்ந்த புகார்கள் குறித்தும் பேசிய அவர், அத்தகைய விவகாரங்களுக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், சுங்கை பூலோ பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 110 கோடி ரிங்கிட் மதிப்பிலான வெள்ளத்தடுப்பு திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாட்டைப் பொதுமக்கள் இச்சந்திப்பின்போது வெகுவாகப் பாராட்டியதாகக் குறிப்பிட்ட ரமணன், ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் உட்பட மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கும் விரைவான தீர்வுகளை வழங்க உறுதியளித்தார்.

கடந்த 15-வது பொதுத் தேர்தலில் மக்கள் நீதிக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட ரமணன், பாரிசான் நேஷனல் வேட்பாளர் கைரி ஜமாலுதீனை 2,693 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தொகுதியில் மொத்தம் 1,58,090 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

