
கோலாலம்பூர் அக் 21-
2017ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட போதிலும், குளுவாங், லாடாங் மெங்கிபோல் தமிழ்ப்பள்ளியின் புதிய தளத்திற்கான நில விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை ஜொகூர் மாநில அரசு விளக்க வேண்டும்.
ஒன்பது ஆண்டுகள் என்பது ஒரு பள்ளிச் சமூகத்தை நிச்சயமற்ற நிலையில் காத்திருக்க வைப்பதற்கு மிக நீண்ட காலமாகும்.
இவ்வளவு நீண்டகாலத் தாமதத்திற்கு மாநில நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.
2017 மே 11ஆம் தேதியிட்ட ஜொகூர் மாநில அரசிதழில், நிலம் கையகப்படுத்தல் சட்டம் 1960-இன் பிரிவு 8-இன் கீழ், அறிவிப்பு எண் 2652 மூலம், மலேசியக் கல்வி அமைச்சின் (KPM) பயன்பாட்டிற்காகப் புதிய பள்ளித் தளத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுவது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அரசிதழில், குளுவாங் வட்டத்தில் 1.210 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுவது பற்றிய விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
2017ஆம் ஆண்டிலேயே நிலத்தின் நோக்கமும் இடமும் அடையாளம் காணப்பட்டு விட்டன.
அப்படியிருக்க, இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கும் உண்மையான தடைகள் என்ன?
கல்வி அமைச்சு நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தி விட்டதாகக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், நிலத்தின் உரிமையை முறைப்படி இறுதி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மாநில அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளன.
நிலம் தொடர்பான விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன, அதனை நிறைவு செய்வதற்கு நில அலுவலகம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதைக் கல்விச் சமூகத்தினர் அறிந்துகொள்ள உரிமை உண்டு.
இந்த விவகாரம் இன்று மக்களவையில் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினராலும் எழுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தீவிர கவனத்தைப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது.
ஜொகூர் மாநில மந்திரி பெசார் இதில் நேரடியாகத் தலையிட்டு, குளுவாங் நில அலுவலகம் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையையும், கண்காணிக்கக்கூடிய தீர்வுக்கான கால அட்டவணையையும் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.
ஜொகூர் மாநில அரசு அடுத்த 14 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். மேலும், இவ்விவகாரத்திற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமித்து, நிலம் தொடர்பான நடைமுறைகளை நிறைவு செய்வதற்கான இலக்குத் தேதியையும் அறிவிக்க வேண்டும்.
ஏதேனும் தடைகள் இருந்தால்,t அவற்றைத் தீர்ப்பதற்கான குறிப்பிட்ட திருத்த நடவடிக்கைகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இந்தப் பள்ளித் திட்டம் அடுத்தகட்டத்திற்குச் செல்லும் வகையில் தீர்வை வழங்குவதன் மூலமே மாநில நிர்வாகத்தின் செயல்திறன் நிரூபிக்கப்பட வேண்டும்.
இந்தத் தாமதத்தின் விளைவுகளை மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்ந்து சுமக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது.
சிவமலர் கணபதி (Sivamalar Genapathy)
துணைப் பொதுச் செயலாளர் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர் மலேசிய மக்கள் நீதிக் கட்சி (KEADILAN)

