ஸ்தாப்பாக் முத்து மாரியம்மன் கோவிலுக்கு நிதி திரட்டும் வகையில்ஸ்ரீ ஷாங்கரி பரம்பரா நூல் வெளியீடு! அடுத்த தலைமுறைக்கான ஆன்மிக மற்றும் பாரம்பரிய அறிவுக் களஞ்சியம்!

கோலாலம்பூர், அக் 24-
ஸ்தாப்பாக் ஆயர் பானாஸ் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில் தேவஸ்தானம், ஸ்ரீ ஷாங்கரி பரம்பரா நூல் தொகுப்பின் மலேசிய வெளியீட்டு விழாவினை வரும் அக்டோபர் 30, ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு, கோலாலம்பூர் ம.இ.கா. தலைமையகக் கட்டடத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடத்தவுள்ளது என்று ஆலய அறங்காவலர் டத்தோ ராஜா சைமன் தெரிவித்தார்.

ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் இந்த நூல் வெளியீடு விழா விமரிசையாக நடைபெறுகிறது.

நான்கு பாகங்களைக் கொண்ட இந்த நூல் தொகுப்பை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70ஆவது ஜகத்குரு சங்கராச்சாரியார், பரமபூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (பால பெரியவர்) அருளியுள்ளார்.

இந்த விழா நூட்டு முறைகளையும் நமது பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள உதவும் இக்கொள்கை, வண்ணப் படங்களுடன் கூடிய பயனுள்ள தலைக்கலஞ்சியமாகத் திகழ்கிறது.

பூஜை பாத்திரங்களும் அவற்றின் பயன்பாடுகளும், வழிபாட்டிற்கு பயன்படுத்தப் படும்
மலர்கள், இலைகள், பழங்கள், மூலிகைகள் மற்றும் தாவரங்களின் சிறப்புகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன.

மேலும், பாரம்பரிய இனிப்பு வகைகள் உட்பட 97 வகையான நைவேத்தியம் மற்றும் பிரசாதத் தயாரிப்பு முறைகளும் இடம்பெற்றுள்ளன.

அழகிய வண்ணப் புகைப்படங்களுடன், பொருட்களின் பெயர்கள் தமிழில் வழங்கப்பட்டுள்ளன.

இதனால், வீடுகளிலும் ஆலயங்களிலும் நாம் அன்றாடம் காணும் வழிபாட்டுப் பொருட்களை அடையாளம் காணவும், அவற்றின் பயன்பாட்டையும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

குறிப்பாக, மலர்கள், இலைகள், மூலிகைகள் மற்றும் தாவரங்களின் அறிவியல் பெயர்களுடன், அவற்றின் பாரம்பரிய மருத்துவப் பயன்பாடுகள் குறித்த ஆதார விளக்கங்களும், ஆயுர்வேதத்தின் வாதம், பித்தம், கபம் ஆகிய தோஷங்களுடனான தொடர்புகளும் இடம்பெற்றுள்ளன.

நமது பாரம்பரியத்தில் பயன்படுத்தப்படும் தாவர வளங்களுக்குள் பொதிந்துள்ள அறிவுச் செழுமையையும், உடல்நலம் மற்றும் நல்லாழ்வு குறித்த பாரம்பரிய அணுகுமுறைகளையும் அறிந்து கொள்ள இந்த நூல்கள் உதவுகின்றன.

இன்றைய ‘ஜென் Z’ இளைய தலைமுறையினருக்கு, தங்கள் இல்லங்களிலும் ஆலயங்களிலும் கடைப்பிடிக்கப்படும் வழக்கங்களின் பொருளை அறியவும், சனாதன தர்மத்துடன் தொடர்பை வளர்த்துக் கொள்ளவும் இந்த நூல் தொகுப்பு வழிகாட்டுகிறது.

பெரியவர்கள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு, தாங்கள் அறிந்த பாரம்பரிய அறிவை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ளவும், அடுத்த தலைமுறைக்குப் பகிர்ந்தளிக்கவும் இது சிறந்த இலவசக் கையேடாக அமையும்.

இந்தக் கல்வி மற்றும் விழிப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த அமைப்புகள், ஆலயங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நூல்கள் வழங்கப்படும். இதன்வழி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் நமது ஆன்மிக, பண்பாட்டு அறிவைக் கொண்டு சேர்ப்பதே நோக்கமாகும்.

இந்த நூல்கள் மூலம் கிடைக்கும் வருவாய் ஸ்தாப்பாக் ஆயர் பானாஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் தேவஸ்தானத்திற்கு நிலம் வாங்க பயன்படுத்தப்படும்.

இந்த நிலத்தின் மதிப்பு 3 லட்சத்து 50,000 வெள்ளி ஆகும் என்று அவர் சொன்னார்.

இம்முயற்சி, பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதையும், இளைய தலைமுறையினரிடம் சமய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஆலய வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதையும் ஒருங்கிணைக்கிறது என்று அவர் சொன்னார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் அறங்காவலர் குணசீலன், ஆலயத் தலைவர்
துரைசாமி, கமிட்டி உறுப்பினர்கள் சாந்தி, மாலா, டாக்டர் விவா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles