
கோலாலம்பூர், அக் 25-
மலேசியாவில் ‘தீபாவளி’ என்ற தமிழ்மொழி சார்ந்த சொல் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும் நிலையில், ‘திவாளி’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன எனக் கூட்டரசு அமைச்சர் ஹன்னா இயோவிடம் மலேசியத் தமிழர் தேசியப் பேரவைத் தலைவர் தமிழ்த்திறன் செல்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்மொழியின் சொற்களைச் சரியாகப் பயன்படுத்துவதுடன், அதன் மொழியியல் மரபையும் தனித்தன்மையையும் மதிப்பது அனைவரின் கடமையாகும். குறிப்பாக, பொதுவாழ்வில் பொறுப்புமிக்க பதவிகளை வகிப்பவர்கள் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, தமிழ்மொழியின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் ‘தீபாவளி’ அல்லது ‘விளக்கணி விழா’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதே தமிழ்மொழிக்கு மதிப்பளிக்கும் செயலாகும். இதனைக் கருத்தில் கொண்டு, அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும் சொல்லுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தமிழ்த்திறன் செல்வநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

