சிலிக்கான் வேலி பொது விருதை வென்றார் சிவசங்கரி

ஷா ஆலாம், அக் 26 : நாட்டின் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, எகிப்தின் ஃபரிடா மொஹமெட்டை நேர் செட்களில் எளிதில் தோற்கடித்து, 2026 சிலிக்கான் வேலி பொது விருதின் வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.

கலிபோர்னியாவின் ரெட்வுட் நகரில் நேற்று இரவு நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் சிவசங்கரி, 20-வது இடத்தில் உள்ள தனது எதிராட்டக்காரரை, வெறும் 31 நிமிடங்களில் 11-7, 11-6, 11-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

கடந்த ஆண்டு இதே தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஒலிவியா வீவரிடம் தோல்வியடைந்த சிவசங்கரி, இவ்வாண்டு வெற்றியாளர் பட்டம் வென்று தனது பின்னடவை சரி செய்துக் கொண்டார்.

இது சிவசங்கரியின் நான்காவது தங்க அளவிலான பட்டமாகும். அத்துடன் இப்பருவத்தில் அவரது முதல் தொழில்முறை ஸ்குவாஷ் சங்க (PSA) பட்டமும் ஆகும்.

வெற்றிக்குப் பிறகு பிஎஸ்ஏ ஸ்குவாஷ் தொடரிடம் (PSA Squash Tour) பேசிய அவர், “பிளாட்டினம் தொடர்களின் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன், அதை இந்த பருவத்தின் தொடக்கத்திலேயே செய்துவிட்டேன்.

எனவே, இப்போது நான் இன்னும் ஒரு படி மேலே சென்று, பிளாட்டினம் அளவிலான போட்டி ஒன்றில் வெல்ல முயற்சிக்க வேண்டும்,” என்று கூறினார்.

கடந்த மாதம், ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிவசங்கரி தனது மகளிர் ஒற்றையர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டதுடன், மலேசிய மகளிர் அணி தங்கப் பதக்கம் வெல்லவும் உதவினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், கெடாவில் பிறந்த 27 வயதான இந்த வீராங்கனை 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தனது தகுதியையும் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles