
கோலாலம்பூர், அக் 26: நாட்டின் தமிழ் ஊடகத் துறைக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ள ‘மக்கள் ஓசை’ நாளிதழின் மூத்த ஆசிரியர் டாக்டர் ராஜன் பூபாலனின்(68) மறைவுக்கு தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
இன்று காலை வெளியான டாக்டர் ராஜனின் மறைவுச் செய்தி தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
இம்மாத தொடக்கத்தில் செலாயாங் மருத்துவமனைக்குச் சென்று அவரை நேரில் சந்தித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
“இந்தச் செய்தியை என்னால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, குறிப்பாக இம்மாதத் தொடக்கத்தில் நான் செலாயாங் மருத்துவமனைக்குச் சென்று அவரை நேரில் நலம் விசாரித்ததும், Tabung Kasih@HAWANA திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கியதும் என் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது.
அந்தச் சந்திப்பு அவரோடு நான் செலவழித்த கடைசித் தருணங்களில் ஒன்றாக மாறும் என்று நான் அப்போது நினைக்கவில்லை,” என்று தியோ நி சிங் வருத்ததோடு தெரிவித்தார்.
பத்திரிகைத் துறையில் சுமார் 45 ஆண்டுகள் மிகத் தீவிரமாகப் பங்காற்றிய டாக்டர் ராஜனின் அர்ப்பணிப்பும் உழைப்பும், நாட்டின் தமிழ் ஊடகத் துறையில் ஒரு பெரிய முத்திரையை பதித்துள்ளது என்று அமைச்சர் புகழாரம் சூட்டினார்.
மேலும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தத் துயரமான சூழலை எதிர்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு மன வலிமையும் அமைதியும் கிடைக்க இறைவனைப் பிரார்த்திப்பதாகக் கூறினார்.

