
ஜொகூர் பாரு, அக் 26-
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு ஏழை, எளிய குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஒற்றுமை கரங்கள் இயக்கம் தொடர்ந்து அறப்பணியில் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் சிவா ஃபுரோன்ஸ் ஜேம்ஸ் தெரிவித்தார்.
ஜொகூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் Persatuan Kebajikan Keprihatinan Rakyat Bersatu Johor Bahru எனும் இவ்வமைப்பு, ஏழ்மை நிலையில் உள்ள மற்றும் ஆதரவற்ற குடும்பங்கள் மகிழ்ச்சியுடனும் கண்ணியத்துடனும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அமைப்பின் ஆலோசகர்களான ஸ்டீவன் பட்டினாதன் மற்றும் செல்லதுரை ஜேம்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இவ்வறப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, உதவி தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 300 ரிங்கிட் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களுடன், தீபாவளிப் பண்டிகைச் செலவுகளுக்கு உதவும் வகையில் 100 ரிங்கிட் ரொக்க உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி, பொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்குக் கல்விக் கட்டண உதவிகளும், பள்ளிக்குச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவுகளை ஈடுகட்டும் உதவிகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், முதியவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் இவ்வமைப்பு தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்த அறப்பணிகளின் சிறப்பம்சமாக, அரசாங்கத்தின் நிதியுதவியைச் சார்ந்திருக்காமல், அமைப்பின் உறுப்பினர்களின் சொந்த நிதிப் பங்களிப்புகளைக் கொண்டே இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, உதவி தேவைப்படும் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதே ஒற்றுமை கரங்கள் இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் சிவா ஃபுரோன்ஸ் ஜேம்ஸ் தெரிவித்தார்.

