ரிம் தொகுதியில் எஸ்மா எஸ்ரினுக்கு ஆதரவு திரட்டிய பக்காத்தான் தலைவர்கள்!

ஜாசின், அக். 31 –

மலாக்கா மாநிலத் தேர்தலில் ரிம் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் எண் 1 வேட்பாளர் எஸ்மா எஸ்ரினுக்கு ஆதரவாக, ஜாசின் லிப்பாட் காஜாங்கில் உள்ள எம்.பி.ஜே. மண்டபத்தில் கூட்டணித் தலைவர்களும் ஆதரவாளர்களும் திரண்டனர்.

பக்காத்தான் ஹராப்பானின் சிவப்பு நிற உடைகளுடன் வந்திருந்த கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்களும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மக்கள் பிரதிநிதிகளான டாக்டர் ஸாலிஹா முஸ்தபா, சையது இப்ராஹிம் சையது நோ, அக்மால் நசீர் ஆகியோருடன் ஜோகூர் மற்றும் மலாக்கா மாநில கெஅடிலான் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

எஸ்மா எஸ்ரின் சமூகநலப் பணிகள், மகளிர் தலைமைத்துவம் மற்றும் தொகுதி, மாநில அளவிலான கெஅடிலான் கட்சி அமைப்புப் பணிகளில் அனுபவம் பெற்றவர். அந்த அனுபவம் ரிம் மக்களின் தேவைகளை முன்னெடுத்துச் செல்லவும் அவர்களின் குரலைப் பிரதிபலிக்கவும் துணைபுரியும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

தேர்தல் என்பது வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி மட்டுமின்றி, மக்களுக்காகப் பணியாற்றும் பொறுப்பையும் நம்பிக்கையையும் சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களைத் தொடர்ந்து சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, உள்ளூர் தேவைகளுக்காக எஸ்மா எஸ்ரின் குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் முன்வைக்கப்பட்டது.

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள கட்சித் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டதுடன், பிரசாரக் காலம் முழுவதும் இதே உற்சாகத்துடன் செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. “நமது ரிம், நமது எதிர்காலம்” என்ற முழக்கத்துடன் எண் 1 வேட்பாளர் எஸ்மா எஸ்ரினுக்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles