
மலாக்கா, அக் 31-
மலாக்காவின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 112 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இம்முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் கூறினார். கடந்த தேர்தலில் தேசிய முன்னணி, நம்பிக்கைக் கூட்டணி, தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கூட்டணிகளும் அனைத்துத் தொகுதிகளிலும் களமிறங்கின.
இம்முறை நம்பிக்கைக் கூட்டணி அதிகபட்சமாக 24 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேசிய முன்னணி சார்பில் 23 பேரும், பெர்சாமா சார்பில் 16 பேரும், பெர்சத்து சார்பில் ஏழு பேரும், தேசியக் கூட்டணி சார்பில் ஐந்து பேரும், புத்ரா சார்பில் ஒருவரும் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
மொத்த வேட்பாளர்களில் 65 பேர் ஆண்கள்; 14 பேர் பெண்கள் என ரம்லான் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் 11 தொகுதிகளில் நேரடிப் போட்டியும், 11 தொகுதிகளில் மும்முனைப் போட்டியும், ஆறு தொகுதிகளில் நான்முனைப் போட்டியும் நிலவுகின்றன. காடேக், கெலேபாங், பெங்கலான் பத்து, ஆயர் குரோ, புக்கிட் கட்டில், பெம்பான் ஆகிய தொகுதிகளில் நான்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர்களில் தெலோக் மாஸ் தொகுதியில் போட்டியிடும் 66 வயது முகமது ஜாஃபர் மூத்த வேட்பாளர் ஆவார். கோலா லிங்கி தொகுதியில் போட்டியிடும் 24 வயது முக்லிசுல் முபின் ஜுலாசபியா அக்கூட்டணியின் இளைய வேட்பாளர் என்றும் அவர் தெரிவித்தார்.

