
புத்ராஜெயா, அக்.30-
அரசியல் போட்டிகளுக்கு அப்பால், நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய காலகட்டம் இது என்று சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு அரசாங்கத்துடன் நம்பிக்கை, வழங்கல் ஒப்பந்தத்தில் (CSA) கையெழுத்திட பெர்சத்து கட்சி முன்வந்திருப்பது, நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே இத்தகைய ஒத்துழைப்பு ஏற்படுவது, நாட்டின் நிர்வாகத்தில் நிலைத்தன்மையை உருவாக்குவதுடன், தேசிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் சாதகமாக அமையும் என்றார்.
எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைப்பது மடானி அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை அல்ல. அரசாங்கம் பொறுப்பேற்ற தொடக்கத்திலிருந்தே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தகைய ஒத்துழைப்புக்குத் திறந்த மனப்பான்மையுடன் இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அரசாங்கம் அமைக்கப்பட்டு ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே பெர்சத்து கட்சி சிஎஸ்ஏ ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த முன்னேற்றத்தை அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டியின் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், மக்களின் நலன், அரசியல் நிலைத்தன்மை மற்றும் தேசிய நிர்வாகத்தின் தொடர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அணுக வேண்டும் என்று யுனேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

