நஜீப்பின் வீட்டுக் காவல் உத்தரவை மதிக்குமாறு பேரரசர் உத்தரவு

கோலாலம்பூர், நவ 7 : முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதற்கான நிபந்தனைக்குட்பட்ட பொதுமன்னிப்பு உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், அது குறித்த தேவையற்ற விவாதங்களையும் குழப்பங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 42-ன் கீழ் பேரரசருக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு அதிகாரத்தை மதித்து, அந்த உத்தரவை தாமதமின்றி செயல்படுத்துமாறு இஸ்தானா நெகாரா இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

கடந்த செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற்ற பொது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ மற்றும் தேசிய சட்டத் துறை தலைவர் டான் ஸ்ரீ முஹ்மட் டுசுகி மொக்தார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் , நஜிப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கும் முடிவை பேரரசர் எடுத்தார்.

அதன்படி, 5 கோடி ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தியப் பின்னர், தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க நஜீப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நஜிப் நேற்று 5 கோடி ரிங்கிட் அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்தினார்.

இருப்பினும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதில் உள்ள சட்டரீதியான விளக்கங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவின் விளைவுகளை ஆராய்வதற்காக, அவர் வீட்டுக்காவலுக்கு மாற்றப்படுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தேசிய சட்டத் துறை அலுவலகம் நேற்று தெரிவித்திருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles