அமைச்சர் டத்தோஸ்ரீ இமணன் இல்லத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: பல இனத் தலைவர்களை ஒன்றிணைத்த ‘ஒற்றுமை மடானி’ உணர்வு

கோலாலம்பூர், நவம்பர் 9 –
மலேசியாவின் பல்லின மக்களிடையே நிலவும் ஒற்றுமை, நல்லிணக்கம், பரஸ்பர மரியாதையைப் பறைசாற்றும் வகையில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து சிறப்பித்தார்.

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வு, மலேசிய மடானி கோட்பாட்டின் அடிப்படையான ஒற்றுமை, பல்லின நல்லிணக்கத்தின் அடையாளமாக அமைந்ததாக ரமணன் தெரிவித்தார்.

பிரதமரின் வருகை மலேசியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதுடன், பல்வேறு இனங்கள், மதங்கள், கலாசாரங்களைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான நாட்டின் தலைமைத்துவத்தின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

தனது குடும்பத்தினரின் திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் கலந்து கொண்டது மிகப்பெரிய கௌரவம் என்று குறிப்பிட்ட இரமணன் மலேசியர்கள் இன, மத, கலாசார வேறுபாடுகளைக் கடந்து அனைத்து பண்டிகைகளையும் ஒரே குடும்பமாகக் கொண்டாடும் சிறப்பைக் கொண்டவர்கள் என்றார்.

“மலேசியாவுக்கு மிகப்பெரிய தனித்துவம் உள்ளது. நாம் இனத்தாலும், மதத்தாலும், கலாசாரத்தாலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால், பண்டிகைக் காலங்களில் ஒரு பெரிய மலேசியக் குடும்பமாக ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம்.

“இந்திய சமூகத்துடன் தீபாவளியைக் கொண்டாட பிரதமர் வருகை தந்தது மட்டுமன்றி, இந்திய சமூகத்தின் உண்மையான தேவைகள், சவால்கள், குறிப்பாக கல்வி, பொருளாதாரம், குடும்ப நலன் ஆகியவற்றிலும் அவர் காட்டும் அக்கறை பாராட்டுக்குரியது,” என்றார்.

டத்தோஸ்ரீ இரமணன், அவரது குடும்பத்தினரால் அன்புடன் வரவேற்கப்பட்ட இந்நிகழ்வில், பல்வேறு இன, மதப் பின்னணிகளைக் கொண்ட அரசாங்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக், கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபத்லினா சிடேக், கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ, சிலாங்கூர் மாநில சட்டமன்றத் துணை சபாநாயகர் முகமட் கம்ரி கமாருடின் ஆகியோர் அடங்குவர்.

திறந்த இல்ல உபசரிப்பு என்பது மலேசியாவின் நீண்டகால பாரம்பரியமாக விளங்குவதுடன், ஒற்றுமை என்பது அரசாங்கக் கொள்கைகள் மூலம் மட்டுமல்லாமல், மக்களிடையிலான நெருக்கமான உறவுகள், நேரடித் தொடர்புகள் மூலமாகவும் வலுப்படுத்தப்படுவதாக ரமணன் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் பயணிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது சமூகத்தின் பலத்தில் மட்டும் ஒரு நாட்டின் வலிமை அடங்கியிருக்கவில்லை. மாறாக, யாரையும் பின்தங்க விடாமல் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து முன்னேறுவதில்தான் நாட்டின் உண்மையான பலம் உள்ளது.

“மலேசிய மக்கள் அமைதி, நல்லிணக்கம், பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ விரும்புகின்றனர். நமது பன்முகத்தன்மை கொண்டாடப்பட வேண்டுமே தவிர, அது பிளவுகளையும் தவறான புரிதல்களையும் உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது,” என்றார்.

இதனிடையே, மலேசியா முழுவதும் உள்ள இந்து சமூகத்தினருக்கு தனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்த இரமணன், இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகை அனைத்து குடும்பங்களுக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பைக் கொண்டு வர வேண்டும் என வாழ்த்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles