


கோலாலம்பூர் நவ 14-
மலேசியாவின் ஒவ்வொரு குடிமகனின் நலனையும் பாதுகாப்பதே பிரதமராக எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலாய் மொழியை தேசிய மொழியாகவும், இஸ்லாத்தை கூட்டாட்சி மதமாகவும், மலாய்க்காரர்கள் மற்றும் சபா, சரவாக் மாநிலங்களின் பூர்வகுடி மக்களின் சிறப்புரிமைகளையும் நிர்ணயிக்கும் அரசியலமைப்பை நாம் உறுதியாகப் பின்பற்றுகிறோம்.
அதே அடிப்படையில், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் பாதுகாத்து, நாட்டின் செழிப்பை அனைவரும் சமமாக அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.
குத்து விளக்கு (Cahaya Kuthu Vilakku) என்பது உண்மையை நிலைநாட்டவும், நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றவும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
ஊழலை மறைப்பதற்காக இன உணர்வுகள் பயன்படுத்தப்படும்போது நாம் துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் செல்வந்தர்களாக்கிக் கொள்ளும் போது, அதன் பாதிப்புகளை இன வேறுபாடின்றி பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்திய சமூகத்தின் நலனுக்காக நாம் இன்னும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, கல்வி மற்றும் தமிழ்ப்பள்ளிகள், இந்து வழிபாட்டுத் தலங்கள், சிறு வணிகர்களுக்கான வாய்ப்புகள் போன்ற விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நகர்ப்புறங்களிலும் தோட்டப்புறங்களிலும் வறுமையுடன் போராடும் குடும்பங்களின் துயரங்களுக்கும் நாம் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒரே மேசையில் அமர்ந்து, குடும்பத்தினரைப் போல அன்புடனும் நட்புடனும் பழகுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று பிரிக்ஃபீல்ட்ஸில் (Brickfields) நாம் அனுபவித்த பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்க உணர்வை நமது அன்றாட வாழ்க்கையிலும் தொடர்ந்து பேணிப் பாதுகாப்போம் என்று நம்புகின்றேன் என்று தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

