


புத்ரா ஜெயா, செப் 1-
இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணும்படி மனிதவள அமைச்சர்
வ சிவகுமாரை மைக்கி எனப்படும் மலேசிய இந்தியர் தொழில் துறை சம்மேளனம் இன்று கேட்டுக் கொண்டது.
மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், உதவித் தலைவர் திருவுக்கரசு, துணை செயலாளர் ஞானசம்பந்தன் ஆகியோர் இன்று காலையில் மனிதவள அமைச்சர் சிவகுமார் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடித்திருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறைகள் அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால் பெரும் பிரச்சனைகளை எதிர் நோக்கி இருக்கின்றன.
இந்திய உலோகப் பொருள் மறுசுழற்சி கடைகளும் அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால் இதே பிரச்சனைகளை எதிர் நோக்கி இருப்பதாக டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காண உள்துறை அமைச்சு மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சுடன் இணைந்து மனிதவள அமைச்சு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் சிவகுமார் சுட்டிக் காட்டினார்.
இதன் பரிந்துரைகள் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்து அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு நல்ல செய்தி கிடைப்பதற்கு தாமும் போராடி கொண்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.
இதற்கு தீர்வு பிறக்க மனிதவள அமைச்சுடன் இணைந்து மைக்கி முழு ஆதரவு வழங்கும் என்று மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

