
தைப்பிங், மே 13: நாட்டில் 1,919 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு (SBK) கழிவறைகளை மேம்படுத்தி பராமரிக்கும் திட்டத்திற்காக RM134 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப் பட்டதைப் போல, சம்பந்தப்பட்ட பள்ளிகள் ஒவ்வொன்றும் ரிங்கிட் 70,000 ஒதுக்கீட்டைப் பெறும் என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ கூறினார்.
“பள்ளிக் கழிவறைகள் பராமரித்து மேம்படுத்தும் நோக்கத்திற்காக அரசு உதவிபெறும் மதப் பள்ளி (SABK) உட்பட ஒவ்வொரு பள்ளிக்கும் அதற்கான ஒதுக்கீட்டை அனுப்புவோம்,” என்று அவர் கூறினார்.
கடந்த மார்ச் 20 ஆம் தேதி வரை, மொத்தம் 8,354 பள்ளிக் கழிவறைகள் பழுது பார்க்கப் பட்டுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுவர் என கல்வி அமைச்சு தெரிவித்தது. இந்த பராமரிப்பு திட்டத்திற்கு RM654.29 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Bernama

