
பத்து காஜா, ஜூன் 27-
தென் கிந்தா மாவட்ட அளவிலான வளர் தமிழ் விழா நேற்று பத்து காஜா சங்காட் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
தென் கிந்தா மாவட்டத் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் தென் கிந்தா மாவட்ட ஒன்பது தமிழ்ப் பள்ளிகளிலிருந்து 54 மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்பள்ளிகளுக்கிடையிலான நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்காக திருக்குறள் ஒப்புவிக்கும் மற்றும் திருக்குறள் விளக்கப் போட்டி, கவிதை ஒப்புவித்தல் மற்றும் கவிதை விளக்கப் போட்டி மேலும், பேச்சுப் போட்டி என மூன்று போட்டிகள் நடத்தப்பட்டது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி வீரையா கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து பரிசுகளையும் மாணவர்களுக்கு எடுத்து வழங்கினார்.
மேலும் ரி.ம. 5000 இக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மாணவர்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பல பயனுள்ள நடவடிக்கைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மொழியே ஒரு சமுதாயதின் அடையாளம் என இந்தியர்கள் உணர வேண்டும். இவ்வட்டார இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். நம் நாட்டின் இந்திய சமுதாயதின் எதிர்காலத்தைத் தமிழ் பள்ளி மென்மேலும் உயர்த்தும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் பவானி நம்பிக்கை தெரிவித்தார்.
நடைபெற்ற வளர்தமிழ் விழாவில் 2024ஆம் ஆண்டின் சுழற்கிண்ணத்தை கிந்தா வேலி தமிழ்ப்பள்ளி தட்டிச் சென்றது. இரண்டாவது நிலையில் பத்துகாஜா சங்காட் தமிழ்ப்பள்ளி மற்றும் மூன்றாவது இடத்தை கம்பார் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது.
தென் கிந்தா மாவட்டத் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவரும் மாலீம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருமான திரு. ஜோன் சந்தனராஜ் அவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கழகச் சார்பில் வாழ்த்துகளை கூறியதோடு மாணவர்களுக்குப் பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இவ்விழா சிறப்பாக நடத்துவதற்கு பேருதவி புரிந்த அனைத்து தரப்பினருக்கும் கழகச் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

