
கோலாலம்பூர், ஆக.08
வங்காள தேசத்தில் வசிக்கின்ற சிறுபான்மையினரான இந்து சமய மக்கள் கலவரக்காரர்களின் தாக்குதலுக்கு மேலும் ஆளாகாமல் அந்த நாட்டில் புதிதாக அமைந்துள்ள இடைக்கால அரசு பாதுகாக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக வங்கதேச மாணவர்கள் நடத்திய போராட்டம், ஆட்சியாளர்களுக்கு எதிரானதேத் தவிர, அதை கிறிஸ்துவர்கள், பௌத்த சமயத்தினர் உள்ளிட்ட சிறுபான்மை சமய மக்களின் பக்கம் திருப்புவது சரியல்ல என்று மலேசிய சர்வ சமய ஆலோசனை மன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்துள்ளார்
குறிப்பாக, மெகர்பூர் என்ற இடத்தில் இந்து மக்களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு துணைபுரியும் பெட்டிக்கடைகள் உள்ளிட்ட வர்த்தக இடங்களில் தாக்குதல் நடத்துவதும் அவற்றின்மீது தீவைப்பதும் பொருத்தமான நடவடிக்கை அல்ல; அவற்றை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இனத்தாலும் மொழியாலும் சிறுபான்மையினர் என்ற முழக்கத்தின் அடைப்படையில் பாகிஸ்தானில் இருந்து பிரிந்த நாடான வங்கதேசத்தின் மக்களுக்கு பெரும்பான்மை-சிறுபான்மை என்ற பிரிவினை எண்ணமே தோன்றக்கூடாது. சிறுபான்மையினரை ஆதரிக்கும் பக்குவம் இயல்பாகவே அந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் மனதில் தோன்ற வேண்டும்.
தவிர, வங்கதேச மாணவர்களுக்கென்று ஒரு சிறப்பு வரலாறு உண்டு; உலகத் தாய்மொழி நாள் உருவானதற்கான வரலாற்றை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்-குமுன் படைத்தவர்கள், டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள். அவர்களின் வழிவந்த இன்றைய மாணவர்கள், தங்களின் அரசியல் போராட்டத்தில் இருந்து விலகி, சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக இடங்கள்மீது குறிவைப்பதும் தாக்குவதும் அழிப்பதும் ஏற்புடையதல்ல; குறிப்பிட்ட இந்துக்கள் குறிவைத்து கொலைசெய்யப்படுவது கொடூரமானது.
தற்பொழுது பொருளாதார மறுமலர்ச்சியாளரும் ஏழை மக்களின் வங்கியாளர் என்று புகழப்படுபவருமான பேராசிரியர் முகமட் யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. 84 வயதான அவர் வங்காள தேசத்தில் முழு அமைதியை நிலைநாட்டுவார் என்று நம்பிக்கை வைக்கும் அதேவேளை, இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களையும் தாக்குதல் காரர்களிடம் இருந்து காகாப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தங்க கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

