
டல்லாஸ்: ஜூன் 18-
உலகக் கிண்ணக் கால்பந்து லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடினார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான ஹேரி கேன், ஆரம்பத்திலிருந்தே எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
அணிக்காக 12ஆவது நிமிடத்தில் பெனால்டி முறையில் கோல் அடித்த அவர், 42ஆவது நிமிடத்தில் 2வது கோல் அடித்தார்.
குரோஷியாவின் மார்ட்டின் பட்டூரினா, 36ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். ஸ்டாப்பேஜ் நேரத்தில் (45 + 5ஆவது நிமிடம்), குரோஷியாவின் பீட்டர் மூசா அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தது.
இரண்டாவது பாதி ஆட்டம் முழுவதும், இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. 47ஆவது நிமிடத்தில், பெலிங்காமும், 85ஆவது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்டும் கோல் அடிக்க இங்கிலாந்து வெற்றி எளிதாகியது.
பலம் வாய்ந்த குரோஷியா அணி, இங்கிலாந்தின் தடுப்பாட்டத்தை உடைக்க கடுமையாக போராடிய போதும், அவர்களின் கோல் அடிக்கும் முயற்சி கைகூடவில்லை. ஆட்ட நேர முடிவில், 4-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி, குரோஷியாவை வீழ்த்தி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து, உலகக்கோப்பை தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.

