தமிழ்ப்பள்ளிகளின் எழுச்சிக்கு முன்னாள் மாணவர்களின் அர்ப்பணிப்பு அவசியம்! சிவகுமார்அழைப்பு

ஈப்போ, ஆகஸ்டு 3 –

தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய முன்னாள் மாணவர்கள் மீண்டும் களமிறங்கி, தங்களது பங்களிப்பை வலுப்படுத்த வேண்டிய காலகட்டம் இது என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் வலியுறுத்தினார்.

தங்களுக்கு கல்வியையும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அடித்தளத்தையும் வழங்கிய தமிழ்ப்பள்ளிகளுக்கு நன்றிக்கடனாக, முன்னாள் மாணவர்கள் பள்ளிகளின் வளர்ச்சிப் பயணத்தில் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

பேராக், ஈப்போவில் உள்ள Urban Transformation Centre (UTC) பிரதான கூட்ட அறையில் நடைபெற்ற மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் (பெர்தாமா) 17ஆவது தேசியப் பேராளர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோது சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மை என்பது அரசாங்கத்தின் முயற்சிகளால் மட்டும் சாத்தியமாகாது என்றும், அப்பள்ளிகளில் கல்வி கற்று இன்று பல்வேறு துறைகளில் உயர்ந்துள்ள முன்னாள் மாணவர்களின் அர்ப்பணிப்பும் ஆதரவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர் சேர்க்கை குறைந்து வருவது தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் முக்கிய சவாலாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், பெற்றோர்களிடையே தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைப்பதிலும், புதிய மாணவர்களை ஈர்ப்பதிலும் முன்னாள் மாணவர் அமைப்புகள் முன்னிலை வகிக்க வேண்டும் என்றார்.

மேலும், பெர்தாமாவின் 17ஆவது தேசியப் பேராளர் மாநாட்டின் ஏற்பாடுகளை பாராட்டிய சிவகுமார், மாநாட்டு நடவடிக்கைகளுக்காக தமது சார்பில் 5,000 ரிங்கிட் நன்கொடையையும் வழங்குவதாக அறிவித்தார்.

முன்னதாக மாநாட்டில் தலைமையுரையாற்றிய பெர்தாமாவின் தேசியத் தலைவர் குமரன் மாரிமுத்து, தமிழ்ப்பள்ளிகள் கல்வியை வழங்கும் நிலையங்கள் மட்டுமல்ல; தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் சமூக அடையாளத்தை தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் முக்கியப் பாலமாக விளங்குகின்றன என்றார்.

நாடு முழுவதும் உள்ள முன்னாள் மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து மாணவர் சேர்க்கை பிரசாரங்கள், பெற்றோர் சந்திப்புகள், கல்வி ஊக்க நடவடிக்கைகள் மற்றும் சமூக விழிப்புணர்வு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பெர்தாமாவின் தேசியத் துணைத் தலைவரும் இம்மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான விஜய் வேலாயுதம், தமிழ்ப்பள்ளிகளின் முன்னேற்றம் என்பது தனிநபர்கள் சிலரின் பொறுப்பு அல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் உள்ளிட்டு மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி ஷாஷா வீரையா, மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத் தலைவர் பழனி சுப்பையா, பெர்தாமாவின் தேசிய ஆலோசகர் மனோகரன் நம்புபிச்சை, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியக் கூட்டமைப்புத் தலைவர் டத்தோ க. இராஜமாணிக்கம், சமூகத் தலைவர்கள், முன்னாள் மாணவர் சங்கப் பேராளர்கள் மற்றும் பிரதிநிதிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles