மக்கள் வாழ்வியல் உருமாற்றம் – மடானி அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பிற்கான திறவுகோல்!!

பத்து காஜா,அக்06: மடானி அரசாங்கம் வரையறுத்துள்ள மக்கள் வாழ்வியல் உருமாற்று திட்டங்கள் வறுமை ஒழிப்பிற்கான திறவுகோலாக அமைந்திருப்பதாக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டம் குறித்து பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை மையம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் வாழ்வியல் உருமாற்றத் திட்டம் குறித்த கருதரங்கிற்கு பின்னர் சிவகுமார் இதனை கூறினார்.

மடானி அரசாங்கத்தின் இத்திட்டங்களால் மக்கள் தங்களின் வருமானத்தை பெருக்கவும் பொருளாதார நிலையில் சரியான நகர்வை கொண்டிருக்கவும் வழிசெய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பத்துகாஜாவை சார்ந்த பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் மடானி அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு,பி40 மக்களின் பொருளாதார மேம்பாடு குறித்தெல்லாம் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வியூகம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

அவ்வகையில்,அரசாங்கம் வரையறுத்துள்ள வறிய நிலை ஏழை ஒழிப்பு,விவசாய தொழில் முனைவர் மற்றும் உணவு சார்ந்த தொழில் முனைவர் ஆகிய திட்டவரையறை குறித்தும் அதன் செயல்வடிவம், இலக்கு,அணுகுமுறை என பல்வேறு யுக்திகளும் தெளிவுகளும் இக்கருத்தரங்கில் வழங்கப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,இத்திட்டங்களுக்கு அரசங்கம் கோடிட்டிருக்கும் ஒவ்வொரு வியூகமும் விளக்கப்பட்டது.அதிலிருக்கும் வாய்ப்புகள்,பயன்கள் உட்பட வழிமுறை,வரையறை என பல்வேறு தகவல்களும் விளக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில்,இந்த கருத்தரங்கு வட்டார தலைவர்கள்,சமூக தலைவர்களின் பொறுப்பு மற்றும் செயல்பாட்டையும் நினைவுறுத்தியது.
மேலும்,இத்திட்டங்கள் கீழ் தகுதியான நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் தங்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்த சமூக தலைவர்கள் பங்காற்ற வேண்டும் என்றார்.தொடர்ந்துப்பேசிய அவர் முதற்கட்டமாக இ-கசே திட்டத்தின் மக்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.அவர்கள் வட்டார பெங்கூலு அலுவலகத்தில் இப்பதிவை மேற்கொள்ளலாம் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மடானி அரசங்கம் மக்களின் வாழ்வாதாரத்தில் அக்கறையும் தனி கவனமும் கொண்டுள்ளது என்பதை இத்திட்ட வரைவு காட்டுவதாகவும் அவர்களை வளமான பொருளாதாரம் வாழ்வியல் சூழலுக்கு அடித்தளம் அமைப்பதாகவும் நினைவுறுத்தினார்.

குறிப்பாக,எந்தவொரு தரப்பு மக்களும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதன் இலக்கை நோக்கி இத்திட்டம் நகர்கிறது என்றதோடு பத்துகாஜா நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி பயணிபதாகவும் அவ்வகையில் உள்ளுர் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை உருமாற்றும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் சிவகுமார் தனது நம்பிக்கையினை வெளிப்படுத்தினார்.

மிகவும் சிறந்த முறையில் சிறப்பான நகர்வை கொண்டிருந்த இக்கருத்தரங்கில் நாடாளுமன்ற சேவை மையத்துடன் சட்டமன்ற அலுவலகம்,கிராம மேம்பாட்டு தலைவர்கள்,செயலவையினர்,கே.ஆர்.தி.குடியிருப்பு சங்கத்தினர் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles