
ஷா ஆலம், அக் 25 – கெர்லிங்கில் செயல்பட்டு வரும் மைகீத்தா சூரியன் ஆசிரமம் மற்றும் கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் இயங்கி வரும் குருகுல மாணவர்களுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் தீபாவளி புத்தாடைகளை வழங்கினார்.
அவ்விரு மையங்களிலும் தங்கியிருக்கும் 6 முதல் 18 வயது வரையிலான 39 மாணவர்களை கிள்ளானில் உள்ள பிரபல ஜவுளியகத்திற்கு அழைத்து வந்த பிரகாஷ், அவர்களுக்கு புத்தாடைகளை வாங்கித் தந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
அம்மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி ஜிப்பாவை தேர்வு செய்தனர்.
பிறகு கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள இந்தியா கேட் உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அருசுவை பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களின் அன்பான உபசரிப்பில் மாணவர்கள் பெரிதும் மனம் நெகிழ்ந்து போயினர்.