உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்! டிரம்ப்-கமலா இடையே கடும் போட்டி

வாஷிங்டன்: நவ 5- அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

உலகமே எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறுகிறது.

அதன்படி அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் (60), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் (78) போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு
நாளுக்கு முன்பாகவே பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும்.

இதன்படி தேர்தலுக்கு முன்பாக இதுவரை 7 கோடி பேர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

தற்போதைய தேர்தலில் கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதால், கடந்த தேர்தலை போன்று இந்த முறையும் அதிபர் தேர்தலில் இழுபறி ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

அதனால் தேர்தல் முடிவுகளை இறுதி செய்ய சில நாட்கள் ஆகலாம் என்கின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக தேசிய அளவிலும் மாகாண அளவிலும் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

தேசிய அளவில் சில கருத்துக்கணிப்புகள் கமலாவுக்கு ஆதரவாகவும் வேறு சில கணிப்புகள் டிரம்புக்கு ஆதரவாகவும் உள்ளன. எனினும் பெரும் பாலான கணிப்புகளில் இருவருக்கும் இடையிலான வாக்கு சதவீதத்தின் இடைவெளி ஒரு சதவீதமாக உள்ளது.

இஸ்ரேல் – காசா, ஈரான், லெபனான் இடையிலான போர், ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராய்ட்டர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles