
தெஹ்ரான்:நவ 7-
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் ஜனாதிபதி பதவியை மீண்டும் கைப்பற்றியதால், ஈரானின் கரன்சி மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
டாலருக்கு நிகரான ரியால் 703,000 ஆக சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
2015-ஆம் ஆண்டில், உலக வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்தபோது, ஈரானின் ரியால் மதிப்பு ஓரளவுக்கு சிறந்த நிலையில் இருந்தது.
ஒரு டாலருக்கு 32,000 ரியால் என்ற அளவில் கரன்சியின் மதிப்பு இருந்தது. கடந்த ஜூலை மாதம் ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பதவியேற்ற போது, டாலருக்கு நிகரான ரியால் 584,000 என்ற அளவில் இருந்தது.
இப்போது ஈரான் கரன்சி மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானுக்கு எதிர்கொள்ளவிருக்கும் புதிய சவால்களை காட்டுகிறது.
ஈரானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் 1979இல் கையகப்படுத்தப்பட்டு, அங்கிருந்தவர்கள் 444 நாட்கள் பணயக்கைதிகள் வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்து 45 ஆண்டுகள் கடந்த பின்பும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் நீடிக்கின்றன

