தோல்வி, வழக்கு, கொலை முயற்சி தடைகளை தாண்டி சாதித்த டிரம்ப்: இனி என்ன செய்யப் போகிறார்?

வாஷிங்டன் நவ 7-
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தோல்வி, வழக்குகள் என பல தடைகளை தாண்டி இந்த மகத்தான வெற்றியை எட்டி உள்ளார்.

2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து பதவி விலகியதில் இருந்து 2024இல் மீண்டும் அதிபர் வேட்பாளராகும் வரையிலும் டிரம்ப் ஏதாவது ஒரு வகையில் அமெரிக்காவில் செய்தியாகிக் கொண்டிருந்தார்.

டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில் தனது பெயரில் தனி சமூக ஊடகத்தை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், கடந்த 2021 ஜனவரி 6ஆம் தேதி தனது ஆதரவாளர்கள் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறையை தூண்டினார்.

இதனால் அவர் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஒரு வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் டிரம்பை குற்றவாளியாக அறிவித்தது.

அமெரிக்க வரலாற்றில் கிரிமினல் வழக்கில் குற்றவாளியான ஒரே முன்னாள் அதிபர் டிரம்ப் மட்டுமே.

இதுதவிர, தனது தொழிலிலும் பல முறைகேடுகள் செய்ததாக டிரம்புக்கு எதிராக 34 வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்கு விசாரணைகளால் நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கப்பட்டாலும் டிரம்ப் அசரவில்லை.

மீண்டும் 2024 அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். பிரசார களத்தில் அவரை கொலை செய்ய 3 முறை முயற்சிகள் நடந்தன.

இதில் பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் டிரம்பின் காதை துப்பாக்கி தோட்டா துளைத்துச் சென்றது. இதற்கும் டிரம்ப் அசரவில்லை. ‘மீண்டும் வருவேன், அமெரிக்காவை வலிமையாக்குவேன்’ என மக்களை கவர்ந்தார்.

‘டிரம்ப் வந்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும், பணவீக்கம் அதிகரிக்கும், பிரிவினைவாதம் தலைதூக்கும்’ என கமலா ஹாரிஸ் பிரசாரம் செய்ய, ‘நாட்டின் எல்லைகளை பாதுகாப்பேன் என்று டிரம்ப் முழங்கினார்.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பேன். அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்’ என மக்களை உணர்வுப்பூர்வமாக நெருங்கினார் டிரம்ப்.

அமெரிக்காவில் சுமார் 1 கோடி பேர் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இதில் இந்தியர்களும் அடங்குவர்.

ஏற்கனவே முந்தைய ஆட்சியில் அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எல்லையில் நீண்ட சுவர் கட்டியவர் டிரம்ப். இப்பணியை மீண்டும் அவர் தொடர்வார் என அமெரிக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பார், நாட்டில் வரிகளை குறைத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்துவார், கச்சா எண்ணெய் உற்பத்தியில் கவனம் செலுத்தி, பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவார். கருக்கலைப்பு உரிமையை சட்டப்பூர்வமாக்குவது,

மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் போர்களுக்கு தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்புகளுடன் அமெரிக்க மக்கள் டிரம்புக்கு வாக்களித்து மீண்டும் அதிபராக்கி உள்ளனர்.

உலகில் அமைதியை கொண்டு வருவேன் என டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.

இனி டிரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பதை காண உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles