

செ.வே.முத்தமிழ் மன்னன்
கிள்ளான், ஜூன் 13-
நாட்டில் மிகப்பெரிய தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக கிள்ளான் மிட்லெண்ட்ஸ் தமிழ்பள்ளி விளங்குகிறது.
இந்த பள்ளியில் இயங்கும் மாணவர் தங்கும் விடுதியை பராமரிக்க அடுத்த ஆண்டில் சிலாங்கூர் மாநில அரசு சார்பில் 50,000 வெள்ளி மானியம் வழங்கப்படும் என்று ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இன்று அறிவித்தார்.
மேலும் ஆண்டு தோறும் மிட்லெண்ட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கு வழங்கப்படும் 50,000 வெள்ளி மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.
இன்று பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில் பாப்பா ராயுடு கலந்து கொண்டபோது இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி வாரியத் தலைவர் உதயசூரியன், வாரிய உறுப்பினர்கள் சீரிய நாதன், குமரவேல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, சிலாங்கூர் மாநில கல்வி இலாகா துணை இயக்குநர் டாக்டர் ரஸிடா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
நாட்டில் ஒரு நவீன தமிழ்ப் பள்ளியாக விளங்கும் மிட்லெண்ட்ஸ் தமிழ்பள்ளி 90 லட்சம் வெள்ளியில் நிர்மாணிக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில அரசு 30 லட்சம் வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தது.
18 வகுப்பறைகள் கொண்ட இந்த பள்ளி Bantuan Model எனப்படும் அரசாங்க உதவி பெறும் பள்ளியாகும்.
மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மட்டுமே நாட்டில் மாணவர் தங்கும் விடுதியை கொண்ட பள்ளியாகும்.
200 மாணவர்கள் தங்கி படிக்கும் வசதியை இந்த மாணவர் தங்கும் விடுதி கொண்டிருக்கிறது.
தற்போது 20 மாணவர்கள் மட்டுமே தங்கி படிக்கிறார்கள்.
தங்கும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்த கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர் தங்கும் விடுதியை பராமரிக்க சிலாங்கூர் மாநில அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று பள்ளி வாரியத் தலைவர் உதயசூரியன் கேட்டுக் கொண்டார்.
இதனை கருத்தில் கொண்ட சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, மாணவர் தங்கும் விடுதிக்கு 50,000 வெள்ளியும் பள்ளிக்கு 50,000 வெள்ளியும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

