சுதந்திர நாள் மலேசியர்களுக்கானது – பல்லினத்தின் பெருநாள்!! சிவநேசன் பெருமிதம்!

பீடோர்,ஆக22: சுபிட்சமும் அமைதியும் குடிகொண்ட மலேசியா ஒவ்வொரு மலேசியர்களுக்கும் பெருமிதமான திருநாடு.இந்நாட்டின் சுதந்திரம் ஒவ்வொரு மலேசியருக்குமானது.இச்சுதந்திரநாள் பல்லின மலேசியர்களின் உன்னத திருநாள் என்று மாநில மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

நாட்டின் சுதந்திரம் மூவினத்தின் ஒற்றுமையின் பெரும் சான்று என்பதையும் நினைவுறுத்திய அவர் ஒற்றுமையோடும் புரிந்துணர்வோடும் கைகோர்த்து பெறப்பட்ட சுதந்திரத்தை ஒவ்வொரு மலேசியரும் பெருமையோடு பேணி காத்திடல் வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

நாட்டின் 68வது சுதந்திர நாளை முன்னிட்டு பீடோரில் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் இவ்வாறு கூறினார்.

மேலும்,நம்மிடையே கருத்துவேறுபாடு இருக்கலாம்,ஆனால்,நாம் அனைவரும்
மலேசியர்கள் என்பதில் ஒருபோதும் முரண்பட்டு விடக்கூடாது.இது நம் நாடு.நாம் இம்மண்ணின் மக்கள் என்பதில் ஒவ்வொரு நொடியும் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றார்.

மலேசியா பல்லினம் வாழும் தனித்துவமான நாடு.மொழி,இனம்,மதம்,பண்பாடு,பாரம்பரியம் என பல்வேறு நிலைகளில் நாம் வேறுப்பட்டிருந்தாலும் மலேசியர்கள் என்னும் உன்னத உணர்வில் நாம் அனைவரும் ஒற்றுமையாய் கைகோர்த்து பயணிப்பதே நம் நாட்டின் தனித்துவ பெரும் சிறப்பு எனவும் அவர் அகம் மகிழ கூறினார்.

மலேசியர்களிடையே உயிர்பெற்றிருக்கும் ஒற்றுமை,புரிந்துணர்வு மற்றும் மலேசியர் என்னும் பெரும் உணர்வுதான் இந்நாட்டின் அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் மூலதனமாக இருப்பதாக கூறும் சிவநேசன் இந்நாட்டின் வளர்ச்சியும் மேம்பாடும் மலேசியர்கள் என்னும் உணர்வாலேயே கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும் நினைவுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவும் தொழிற்திறன் கல்வியும் ஆளுமை கொண்டிருக்கும் இன்றைய சூழலில் 68வது சுதந்திர நாளில் நாம் புதியதோர் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது.நாட்டின் வளர்ச்சியோடு பொருளாதார மேம்பாடும் ஒவ்வொரு மலேசியரின் பெரும் பங்களிப்பில் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது என்றுரைத்த அவர் மலேசியராய் நாட்டின் 68வது சுதந்திர நாளை பெரும் முழக்கத்தோடும் மலேசியர் என்னும் உணர்வோடு கொண்டாடி மகிழ்வோம் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles