
ஷா ஆலம், டிச 3- சிலாங்கூர் மாநிலத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் அனைத்துலக புத்தக கண்காட்சி நடைபெறும். அவ்வகையில் நவம்பர் 28ஆம் தேதி தொடங்கிய சிலாங்கூர் அனைத்துலக புத்தக கண்காட்சியை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா தொடக்கி வைத்தார்.
நாட்டு மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க செய்ய இந்த கண்காட்சியை மாநில அரசு ஏற்பாடு செய்திருந்தது.
சிலாங்கூர் அனைத்துலக புத்தக கண்காட்சியில் தமிழ்மொழிக்காகவும் தமிழ்ப் புத்தகங்களுக்காகவும் TAMIL PAVILLION எனும் முகப்பு ஒன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் மானிய உதவியோடு தமிழகத்தைச் சேர்ந்த 9 பதிப்பாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
மேலும், வர இயலாத 40 பதிப்பாளர்களின் புத்தகங்களும் அதனுடன் சேர்ந்து குயில் ஜெயபக்தி புத்தகங்களும் இந்த முகப்பில் இடம்பெற்றுள்ளன.
நவம்பர் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7ஆம் தேதி வரை சிலாங்கூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சி ஷா ஆலமிலுள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

