
கிள்ளான், டிச 3- தொழிலாளர் வேலையிட சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ வின் ஏற்பாட்டில் முதலாளிமார்கள் மேம்பாட்டு பயிலரங்கம் இன்று டிசம்பர் 3ஆம் தேதி கிள்ளானில் உள்ள பெர்கேசோ அலுவலகத்தில் நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர், மாண்புமிகு பாப்பா ராய்டு வீரமான் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
பயிலரங்கில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் MY Future Jobs, Daya Kerjaya 3.0, Progressive Wage Policy (வளர்ச்சியடைந்த ஊதியக் கொள்கை), Lindung Kendiri (தன்னைப் பாதுகாத்தல்) மற்றும் Lindung Kasih (அன்பைப் பாதுகாத்தல்) போன்ற சமூகப் பாதுகாப்புக் குறித்த திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டனர்.
இத்திட்டங்கள் வேலைச் சந்தையை மேலும் உள்ளடக்கியதாகவும் (inclusive), முன்னேற்ற மானதாகவும் (progressive), நிலைத்தன்மை உள்ளதாகவும் (sustainable) உருவாக்க முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மேலும், வேலைத் தளத்தில் தலைவர்களான முதலாளிகள், உற்பத்தித்திறனை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி, ஊழியர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தின் சமூக பொருளாதார நிலைத் தன்மைக்கு பங்களிப்பதிலும் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.
முதலாளிகள், மாற்றுத்திறனாளிகள் (OKU) மற்றும் முன்னாள் சிறைக் கைதிகள், புனர்வாழ்வு பெற்ற கைதிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு சமமான வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சமூக நிலைத் தன்மையில் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று பாப்பா ராய்டு வீரமான் குறிப்பிட்டார்.
உள்ளூர் மக்களான இவர்களுக்கு வேலை வழங்குவது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மாற்று வழியாக அமைவதுடன், நீண்டகாலமாக நாட்டிற்குச் செழிப்பையும் நன்மையையும் அளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் உற்பத்தித் திறன் உடைய பணிச் சூழலை உருவாக்குவதில் சுறுசுறுப்புடனும் (proactive), திறனுடனும் (effective) செயல்படுமாறு மாண்புமிகு டான் பாப்பா ராய்டு முதலாளிகளை வலியுறுத்தினார்.

