கோத்தா டாமன்சாரா பள்ளியின் வசதிகளை மேம்படுத்த ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு – டத்தோஶ்ரீ ரமணன்

சுங்கை பூலோ, ஏப்.12-
கோத்தா டாமன்சாரா, செக்சன் 8 தேசிய இடைநிலைப்பள்ளியின் வசதிகளை மேம்படுத்தவும் மாணவர்களின் நலனுக்காகவும் 2023-ஆம் ஆண்டு முதல் ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலத்திற்காக பள்ளி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் மாணவர்களுக்கு ஆதரவளிப்பதும் ஒரு முக்கியமான முதலீடு என்று மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாணவர்கள் தங்களின் திறமைகளையும் ஆற்றலையும் சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உறுதி செய்வது தங்களின் முன்னுரிமை என்றும், கோத்தா டாமன்சாரா செக்சன் 8 போன்ற பள்ளிகள் உரிய கவனத்தைப் பெறுவதை தாம் தொடர்ந்து உறுதி செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை அப்பள்ளியின் 14-ஆவது விளையாட்டுப் போட்டியை டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த நிதி பங்களிப்புகள் அனைத்தும் அவரது சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023-ஆம் ஆண்டில், கணினி அறை, நூல் நிலையம், ஆசிரியர் அறை, ஆலோசனை அறை, தேர்வு அறை ஆகியவற்றில் குளிரூட்டிகள் பொருத்துவதற்காக 41,700 ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டில், பள்ளிக் கூடாரத்திற்கான ஏர் கூலர்கள் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்களுக்காக 17,034 ரிங்கிட்டும், பேங்க் ரக்யாட் அறக்கட்டளை ஏற்பாடு செய்த மக்கள் கல்வித் திட்டத்திற்காக 10,000 ரிங்கிட்டும் செலவிடப்பட்டது.

மேலும், பள்ளித் திட்டங்களுக்காக 21,800 ரிங்கிட் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர விளையாட்டுப் போட்டிக்காக சுமார் 10,000 ரிங்கிட் மதிப்பிலான பரிசுகளுடன் கூடுதலாக 5,000 ரிங்கிட் நிதியும் வழங்கப்பட்டது.

இதனிடையே, பள்ளி சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று, ‘ப்ரோஜெக் மெஸ்ரா ரக்யாட்’ திட்டத்தின் கீழ் பள்ளியின் சுராவ் வசதியை மேம்படுத்துவதற்கான நிதியையும் ரமணன் அறிவித்தார்.

பள்ளிக்கான புதிய விளையாட்டுத் திடல் தொடர்பாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் மற்றும் கல்வி துணையமைச்சர் வொங் கா வோ ஆகியோரைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles