புத்தாண்டு வாழ்த்து: ஆன்மீக விழுமியங்களுடன் ஒற்றுமை காத்து புதிய உயரங்களை எட்டுவோம்! – டத்தோ ஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர், ஏப்ரல் 14 –
சித்திரை புத்தாண்டு, வைசாகி மற்றும் விஷு ஆகிய மூன்று பண்டிகைகளும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவது, இந்திய சமூகத்தின் ஆன்மீக அடையாளத்தை வலுப்படுத்துவதோடு தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஒரு தூண்டுகோலாக அமைகிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ், சீக்கிய மற்றும் மலையாளி சமூகத்தினரால் ஒருசேரக் கொண்டாடப்படும் இப்பண்டிகைகள், நாட்டின் கலாச்சார செழுமையை பிரதிபலிப்பதோடு, பல்லின மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கான ஒரு பாலமாக அமைகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் ஆன்மீக விழுமியங்கள் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், புத்தாண்டு என்பது சுயபரிசோதனை செய்து, எண்ணங்களைத் தூய்மைப்படுத்தி, நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த தருணம் என்றார்.

“இந்தப் பண்டிகைகள் ஒவ்வொன்றும் இருளை வெல்லும் ஒளி மற்றும் அதர்மத்தை வெல்லும் தர்மம் என்ற உன்னத செய்தியைத் தாங்கி வருகின்றன. இது கடந்த காலத் தவறுகளைக் களைந்து, தூய்மையான மனதுடனும் இறைபக்தியுடனும் நம்மை மெருகேற்றிக் கொள்ளும் நேரமாகும்,” என்று அவர் கூறினார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன், இளைஞர்கள் தங்களின் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் வேளையில் ஆன்மீக வலிமையைப் புறக்கணிக்கக்கூடாது என்றும், அதனை நற்பண்புகள் கொண்ட ஆளுமையை உருவாக்குவதற்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இன்றைய இளைஞர்களின் முன்னேற்றமே மலேசியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்திய சமூகத்தின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டினார்.

மலேசியா மடாணி (Malaysia MADANI) கட்டமைப்பின் கீழ், வெறும் சொல்லோடு நின்றுவிடாமல் செயல்திறனை வலியுறுத்தும் “மடானி செயல்படுகிறது” (MADANI Bekerja) கொள்கையின் அடிப்படையில், மனிதவள அமைச்சும் (KESUMA) மித்ராவும் (MITRA) இணைந்து இந்திய சமூகத்தின் பொருளாதார மற்றும் திறன் மேம்பாட்டிற்காக பல்வேறு வியூகத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

மலேசியர்கள் அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையுடன் செயல்படவும், ஆன்மீக பலத்துடன் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லவும் அழைப்பு விடுத்த அவர், இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் வளம், நலன் மற்றும் அமைதியை வழங்கட்டும் என வாழ்த்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles